I cure the dengue on the seventh day Fox doctor arrested by Blux board

கோயம்புத்தூர்

Add Asianetnews Tamil as a Preferred SourcegooglePreferred

ஏழே நாளில் டெங்கு காய்ச்சலை குணப்படுத்துகிறேன் என்று பிளக்ஸ் போர்டு வைத்து நோயாளிகளுக்கு சிகிச்சை அளித்துவந்த போலி மருத்துவர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.

தமிழகத்தில் டெங்குவால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டே வருகிறது. அதன்படி, கோயம்புத்தூர் மாவட்டத்தில் டெங்கு காய்ச்சல் பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.

இந்தக் காய்ச்சலால் பாதிக்கப்பட்டவர்கள் தனியார் மற்றும் அரசு மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சைப் பெற்று வருகின்றனர்.

டெங்கு காய்ச்சலை பயன்படுத்தி போலி மருத்துவர்களும் சிகிச்சை அளித்து பணம் சம்பாதித்து வருகின்றனர், இதனால், நோய் முற்றிய நிலையில் பலர் அரசு மருத்துவமனைக்கு படை எடுப்பதால் அரசு மருத்துவர்களால் எதுவும் செய்ய முடியாத சூழ்நிலை ஏற்படுகிறது.

கோயம்புத்தூரில் டெங்கு காய்ச்சலுக்கு போலி மருத்துவர்கள் சிகிச்சை அளித்து பணம் சம்பாதிக்கின்றனர் என்று தகவல் மாவட்ட சுகாதாரத்துறை இணை இயக்குனர் மருத்துவர் எம்.சந்திரசேகருக்கு கிடைத்தது.

மேலும், டெங்கு காய்ச்சலை ஏழே நாளில் குணப்படுத்துவதாக கூறி இராமநாதபுரம் பகுதியில் செல்போன் எண்ணுடன் பிளக்ஸ் போர்டுகளும் வைக்கப்பட்டிருந்தன.

இதனைத் தொடர்ந்து பிளக்ஸ் போர்டில் குறிப்பிடப்பட்டுள்ள செல்போன் எண்ணின் அடிப்படையில், சுகாதாரத்துறை இணை இயக்குனர் மருத்துவர் எம்.சந்திரசேகர் மற்றும் மருத்துவ அதிகாரிகள் இராமநாதபுரம் பகுதியில் தீவிர சோதனையில் ஈடுபட்டனர்.

அப்போது, அந்தப் பகுதியில் உள்ள டி.ஜே. கட்டிடத்தில் ‘சன்லைப் கியூர்’ என்ற கிளினிக் செயல்பட்டு வந்தது. அங்குச் சென்ற மருத்துவ அதிகாரிகள் சோதனை நடத்தினர். அப்போது ராபர்ட் சாக்கோ (58) என்பவர் நோயாளிகளுக்கு சிகிச்சை அளித்து வந்தார். அவரிடம் அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டனர்.

அந்த விசாரணையில் அவர் எம்.பி.பி.எஸ். படிக்கவில்லை என்றும், பி.ஏ.பொருளாதாரம் படித்துவிட்டு, நோயாளிகளுக்கு சிகிச்சை அளித்து வந்ததும், போலி மருத்துவர் என்பதும் தெரிய வந்தது.

மேலும், அவர் அக்குபஞ்சர் படித்துள்ளதாக ஒரு சான்றிதழ் வைத்திருந்தார். அதனை அதிகாரிகள் கைப்பற்றினர்.

டெங்கு, பன்றிக் காய்ச்சல், எய்ட்ஸ், நிமோனியா, சிறுநீரக கோளாறு உள்ளிட்ட பல்வேறு நோய்களுக்கும் சிகிச்சை அளிக்கப்படும் என்று எழுதப்பட்ட தகவல் பலகை கிளினிக்கில் பொருத்தப்பட்டு இருந்தது.

தற்போது டெங்கு காய்ச்சல் பரவி வருவதால், இந்த நோயின் பெயரை பயன்படுத்தி ராபர்ட் சாக்கோ ஒரு வாரத்தில் குணப்படுத்துவதாக கூறி வசூல் வேட்டையில் ஈடுபட்டதும் கண்டுபிடிக்கப்பட்டது. கிளினிக்கில் இருந்து சத்து டானிக் மற்றும் வைட்டமின் மருந்துகள் கைப்பற்றப்பட்டன.

பின்னர் போலி மருத்துவர் ராபர்ட் சாக்கோவை கோவை இராமநாதபுரம் காவல் நிலையத்தில் மருத்துவ அதிகாரிகள் ஒப்படைத்தனர்.

அதனைத் தொடர்ந்து மருத்துவம் படிக்காமல் தவறான மருந்துகள் வழங்குதல், மோசடி செய்தல் ஆகியவற்றின் கீழ் வழக்குப்பதிந்து ராபர்ட் சாக்கோவை காவலாளர்கள் கைது செய்தனர். பின்னர் அவரை நீதிமன்றத்தில் சமர்ப்பித்து சிறையில் அடைத்தனர்.