I am happy for opening this while i give many welfares - collector

அரியலூர்

அரியலூரில் பல்வேறு நலத்திட்டங்களை வழங்கியிருந்தாலும் விவசாயிகளுக்கு பயன்படக் கூடிய "நேரடி நெல் கொள்முதல்" நிலையத்தை திறந்து வைப்பதில் மிகவும் மகிழ்ச்சி அடைவதாக ஆட்சியர் லட்சுமி பிரியா தெரிவித்துள்ளார்.

அரியலூர் மாவட்டம், திருமானூர் ஒன்றியம், திருமழபாடியில் தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக்கழகத்தின் சார்பில்,"நேரடி நெல் கொள்முதல் நிலையம்" நேற்று திறக்கப்பட்டது.

இந்த நெல் கொள்முதல் நிலையத்தை மாவட்ட ஆட்சியர் லட்சுமி பிரியா தொடங்கி வைத்தார். அப்போது அவர் பேசியது:

"அரியலூர் மாவட்டத்தில் 19 நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் தொடங்கிட அனுமதி வழங்கப்பட்டு உள்ளது. அதில் இன்று (அதாவது நேற்று) ஏழு நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் திறக்கப்பட்டு செயல்பாட்டிற்கு கொண்டுவரப்பட்டுள்ளன.

மாவட்டத்தில் நான் பல்வேறு நலத்திட்டங்களை வழங்கி, கட்டிடங்கள் திறந்து வைத்திருந்தாலும், அதனைவிட விவசாயிகளுக்கு மிகவும் பயன்படக் கூடிய இந்த நேரடி நெல் கொள்முதல் நிலையத்தினை திறந்து வைப்பதில் மிகவும் மகிழ்ச்சியுடன் பெருமையடைகிறேன்.

விவசாய பெருமக்கள் தங்கள் விளை நிலத்தில் விளைந்த நெல்லை நேரடி நெல் கொள்முதல் நிலையத்தில் விற்று அரசு நிர்ணயம் செய்த தொகையினை தங்கள் வங்கி கணக்கில் நேரடியாக பெற்று பயனடையலாம்.

நெல் கொள்முதல் நிலையத்தில் ஏதேனும் குறைகள் ஏற்பட்டால் உடனடியாக தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழக மண்டல மேலாளர் அல்லது மாவட்ட நிர்வாகத்திற்கு தெரிவிக்க வேண்டும். இந்த நெல்கொள்முதல் நிலையத்தை விவசாயிகள் பயன்படுத்தி பயன்பெறுங்கள்" என்று அவர் பேசினார்.

இந்த நிகழ்ச்சியில், இணை இயக்குனர் (வேளாண்மைத்துறை) அய்யாசாமி, தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழக மண்டல மேலாளர் உமாமகேஸ்வரி, மண்டல துணை மேலாளர் முத்தையா, உதவி மேலாளர் (தரக்கட்டுப்பாடு) கலைமணி,

கண்காணிப்பாளர் தங்கையன், வேளாண்மை உதவி இயக்குனர் (பொறுப்பு) சாந்தி, வேளாண் அலுவலர் வடிவேல் மற்றும் விவசாயிகள் சங்க பிரதிநிதிகள், ஊழியர்கள் பங்கேற்றனர்.