I am a politician - director Pa. Ranjith

காலா படத்தில் வரும் கருத்துக்கள் அனைத்தும் ரசிகர்களுக்காக எழுதியதே தவிர, ரஜினியின் அரசியலுக்காக எந்த இடத்திலும் தான் பேசவில்லை என்று இயக்குநர் பா.ரஞ்சித் கூறியுள்ளார்.

காலா திரைப்படத்தை, சென்னையில் சத்தியம் திரையரங்கில் ரசிகர்களுடன் பார்த்துவிட்டு வந்த இயக்குனர் ரஞ்சித் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது தான் எதிர்பாக்காத அளவிற்கு படம் வரவேற்பை பெற்றுள்ளதாக தெரிவித்தார்.

காலா படம் குறித்து ரஜினி ரசிகர்கள் என்ன சொல்லப் போகிறார்கள் என்ற பயம் இருந்தது. ஆனால், நினைத்ததற்கு மாறாக ரஜினி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பு பெற்றது மகிழ்ச்சி அளிக்கிறது என்றார். காலா படத்தில் உள்ள கருத்துகள் அனைத்தும் மக்களுக்காகதான் எழுதியதே தவிர, ரஜினியின் அரசியலுக்காக எந்த இடத்திலும் தான் பேசவில்லை என்று கூறினார்.

தன்னுடைய பெரிய இலக்கு மக்களிடையே உள்ள சமத்துவமின்மையை உடைக்க வேண்டும் என்பதுதான். அதற்கு கலையை பயன்படுத்தி கொள்கிறேன் என்றார். நீங்கள் அரசியல்வாதியா? இயக்குநரா? என்று செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு ரஞ்சித் தான் அரசியல்வாதி என்றார். என்னுடைய வாழ்க்கை அரசியலாக இருப்பதால், தான் எடுக்கும் படங்கள் அனைத்தும் அரசியல் படமாக இருக்கும் என்றும் இயக்குநர் ரஞ்சித் கூறினார்.