hydro carbon protestors arrested by police

ஹைட்ரோ கார்பன் எடுக்கும் திட்டத்தை கைவிட வலியுறுத்தி சென்னை எழும்பூர் ரயில் நிலையத்தில், ரயிலை மறிக்க முயன்ற கல்லூரி மாணவர்களை போலீசார் கைது செய்துள்ளனர்.

தமிழகத்தில் சில மாதங்களாக எங்கு பார்த்தாலும் போராட்டம்தான் நடந்து வருகிறது. இதில் அண்மையில் மாணவர்கள் ஜல்லிக்கட்டுக்காக செய்த போராட்டம்தான் மிக முக்கியமானது.

ஜல்லிக்கட்டுக்காக போராட்டம் செய்த மாணவர்கள் அதில் வெற்றியும் கண்டார்கள். அதன்பிறகு போராட்டத்தில் ஈடுபடாமல், தங்களது படிப்பில் கவனம் செலுத்த கல்லூரி சென்றனர். 

இந்நிலையில் மீண்டும் அவர்கள் ஹைட்ரோ கார்பன் திட்டம் மற்றும் டெல்லியில் போராடும் விவசாயிகளுக்கு ஆதரவாக களம் இறங்கியுள்ளனர்.

இன்று தாளமுத்து நடராஜன் மாளிகை முன்பு திரண்ட பல்வேறு கல்லூரிகளைச் சேர்ந்த மாணவர்கள், எழும்பூர் ரயில் நிலையத்திற்கு சென்று அங்குள்ள ரயிலை மறிக்க முயன்றனர்.

அப்போது அங்கு பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்த போலீஸார் மாணவர்களை தடுத்தனர். 

இதையடுத்து மாணவர்கள், சாலையில் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் போலீசார் அவர்களை கைது செய்தனர், கைது செய்தது மட்டுமல்லாமல் குண்டுக்கட்டாக தூக்கிச் சென்று அவர்களை போலீஸ் வாகனத்தில் ஏற்றி சென்றனர். இதனால் அந்த பகுதியில் பெரும் பரபரப்பு நிலவியது.