hydro carbon protest in success path
ஹைட்ரோ கார்பன் திட்டத்திற்கு எதிராக நடத்தி வரும் போராட்டத்தை கைவிடக் கூடிய சூழல் உருவாகி இருப்பதாக போராட்டக்குழு தெரிவித்துள்ளது.
புதுக்கோட்டை மாவட்டம் நெடுவாசல் கிராமத்தில் ஹைட்ரோ கார்பன் எரிபொருளை எடுப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து அக்கிராம மக்கள் தொடர் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
மக்களின் இந்த அறவழிப் போராட்டத்திற்கு அனைத்து அரசியல் கட்சிகளும் ஆதரவு தெரிவித்ததால் திட்டத்தை செயல்படுத்துவதில் மத்திய அரசுக்கு சிக்கல் எழுந்தது.

இதற்கிடையே பிரச்சனைக்குத் தீர்வு காண போராட்டக்கு குழு டெல்லி சென்று மத்திய பெட்ரோலியத்துறை அமைச்சர் தர்மேந்திர பிரதானுடன், இன்று பேச்சுவார்த்தை நடத்தினர்.
இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களுக்குப் பேட்டி அளித்த போராட்டக்குழுவினர், ஹைட்ரோ கார்பன் திட்டத்தில் இருந்து நெடுவாசல் கிராமத்திற்கு விலக்கு அளிக்க வேண்டும் என்று அரசுக்கு வலியுறுத்தியதாகத் தெரிவித்தனர்.

மக்கள் விரும்பாத எந்தத் திட்டத்தையும் மத்திய அரசு செயல்படுத்தாது என்று அமைச்சர் தங்களுக்கு உறுதிமொழி அளித்ததாக குறிப்பிட்ட அவர்கள், அரசு மீது தங்களுக்கு முழு நம்பிக்கை இருப்பதாகவும், போராட்டத்தை கைவிடக் கூடிய சூழல் தற்போது உருவாகி இருப்பதாகவும் கூறினர்
