மனைவியின் கள்ளக் காதலனிடம் தமது மனைவியுடனான கள்ளக் காதலை கைவிடும்படி எச்சரித்த கணவனை கார் ஏற்றி கொலைசெய்த கள்ளக்காதலன் செய்த கொடூர சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கிருஷ்ணகிரி மாவட்டம் தேன்கனிக்கோட்டை தடிக்கல் அருகே உள்ள முத்துராயன்கொட்டாய் கிராமத்தை சேர்ந்தவர் சின்ன பையன். இவர் விவசாயம் செய்து வந்தார். மேலும் பசுமாடுகளையும் வளர்த்து வந்தார். இவரது மனைவி முத்துமாரி. சின்ன பையன் தினமும் பசுமாடு பாலை அதே பகுதியில் உள்ள திப்பசந்திரம் கிராமத்தில் பால்பண்ணை வைத்திருக்கும் முனிராஜ்க்கு விலைக்கு கொடுத்து வந்தார்.

இந்தநிலையில், பால் பண்ணை வைத்திருக்கும் முனிராஜிக்கும், முத்துமாரிக்கும் இடையே கள்ளக்காதல் ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இதை அறிந்த சின்ன பையன் நேராக பால் பண்ணைக்கு சென்று எனது மனைவியுடன் பேசுவதை நிறுத்தி விடு. இனி மேல் எனது மனைவியுடன் பேசினால் நடப்பதே வேறு என கூறி முனிராஜை எச்சரித்துள்ளார்.

ஆனாலும் அவர் கேட்கவில்லை தினமும் தனிமையில் சந்தித்து உல்லாசமாக இருந்துள்ளார். இதனால் கோபமடைந்த கணவன் மீண்டும் பால்பன்னைக்கே சென்று எச்சரித்துள்ளார். மேலும் ஆத்திரம் அடைந்த சின்ன பையன் அவரை தாக்கியதாக தெரிகிறது.

இதற்கிடையே பால் பண்ணைக்கு கொண்டு சென்று பால் கொடுப்பதையும் நிறுத்தினார். மேலும் கள்ளத்தொடர்பை கைவிடாததால் தன்னுடைய மனைவி முத்துமாரியையும் கண்டித்தார்.

முத்துமாரியை சத்தம் போட்டதாலும், தன்னை தாக்கியதாலும் கோபம் அடைந்த முனிராஜ் தன் கள்ளக்காதலுக்கு இடையூறாக இருக்கும் சின்ன பையனை இனிமேல் விட்டு வைக்கக் கூடாது. தீர்த்துக்கட்டி விட வேண்டும் என திட்டம் தீட்டினார். இதற்காக காரை விட்டு மோதி கொன்று விட்டு அவர் விபத்தில் இறந்து விட்டார் என போலீசார் மற்றும் எல்லோரையும் நம்ப வைத்து நாடகமாடி ஏமாற்றி விடலாம் என்று திட்டம் போட்டதாக தெரிகிறது.

நேற்று இரவு சின்ன பையன் தனது மோட்டார் சைக்கிளில் வீட்டிற்கு சென்று கொண்டிருந்தார். அப்போது முனிராஜ் திட்டம் தீட்டியபடி காரில் பின்தொடர்ந்து வந்துள்ளார்.

திம்பசந்திரம் கிராமத்தில் இருந்து முத்துராயன் கொட்டாய் கிராமத்திற்கு செல்லும் சாலையில் மோட்டார் சைக்கிள் சென்றபோது சின்ன பயைன் மீது காரை கொண்டு வேகமாக மோதினார். இதில் அவர் தூக்கி வீசப்பட்டு பலத்த காயத்துடன் துடித்துக் கொண்டிருந்தார்.

கார் மோதியதில் அவர் உடனடியாக சம்பவ இடத்திலேயே இறந்து விடுவார் என முனிராஜ் நினைத்திருந்தார். ஆனால் அவர் நினைத்தபடி சின்ன பையன் உடனடியாக இறக்க வில்லை. அப்படியிருந்தும் தள்ளாடி எழுந்ததால் தான் நினைத்தது போல நடக்காததால் முனிராஜ் காரில் இருந்து இறங்கி வந்து கூர்மையான கத்தியை எடுத்து உயிருக்கு போராடிக் கொண்டிருந்த சின்ன பையனை சரமாரியாக வெட்டினார். அவரது வலது கை, முகம் என கத்தியால் கொடூரமாக தாக்கியுள்ளார்.

இந்த சம்பவத்தை நேரில் பார்த்த அப்பகுதி பொதுமக்கள் அங்கு ஓடி வந்தனர். பொதுமக்கள் கையில் சிக்கினால் தன்னை அடித்தே கொன்று விடுவார்கள் என பயந்த முனிராஜ் அங்கிருந்து உடனடியாக தப்பி ஓடி விட்டார். உயிருக்கு போராடிக் கொண்டிருந்த சின்ன பையனை பொதுமக்கள் மீட்டு அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு சிறிது நேரத்திலேயே அவர் பரிதாபமாக இறந்தார்.

இந்த கொலை சம்பவம் குறித்து தகவல் அறிந்த தேன்கனிக்கோட்டை போலீஸ் நிலைய இன்ஸ்பெக்டர் விரைந்து சென்று சம்பவ இடத்தை பார்வையிட்டு கொலை நடந்த சம்பவத்தை நேரில் பார்த்த அப்பகுதி மக்களிடம் விசாரணை நடத்தினார். மேலும் போலீசார் வழக்குப்பதிவு செய்து தப்பி ஓடிய முனிராஜை வலைவீசி தேடி வருகின்றனர்.