திருப்புவனம்,

திருப்புவனத்தில் வீட்டில் இருந்த கணவன், மனைவி மற்றும் மகனை வீட்டிற்குள் புகுந்து மர்ம நபர்கள் சரமாரியாக அரிவாளால் வெட்டியுள்ளனர். மூவரும் மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வருகின்றனர்.

திருப்புவனத்தில் இருந்து பூவந்தி செல்லும் சாலையில் அண்ணாமலைநகர் உள்ளது. இப்பகுதியைச் சேர்ந்தவர் பாஸ்கரதாஸ் (52). பொறியியலாளராக பணியாற்றி வருகிறார். இவருடைய மனைவி விஜயபாலா (47). மகன் செருபா பெல் ஜெயசீலன் (22), சென்னையில் உள்ள தனியார் பொறியியல் கல்லூரியில் நான்காம் ஆண்டு படித்து வருகிறார். இவர் விடுமுறையில் ஊருக்கு வந்திருந்தார்.

இந்த சூழ்நிலையில் நேற்று மதியம் பாஸ்கரதாஸ் தனது மனைவி, மகனுடன் பேசிக் கொண்டிருந்தபோது இவர்களது வீட்டிற்கு 30 வயது மதிக்கத்தக்க மூன்று பேர் மோட்டார் சைக்கிளில் வந்தனர்.

பின்னர், அந்த நபர்கள் வீட்டிற்குள் நுழைந்து பாஸ்கரதாஸ், மனைவி விஜயபாலா, மகன் ஜெயசீலன் ஆகிய மூன்று பேரையும் சரமாரியாக அரிவாளால் வெட்டிவிட்டு ஓடிவிட்டனர்.

இதில் காயமடைந்த மூன்று பேரும் மதுரை பெரிய மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இந்தச் சம்பவம் குறித்த புகாரின்பேரில் பூவந்தி காவல் மேற்பார்வையாளர் முத்துக்குமார், துணை மேற்பார்வையாளர் சசிகலா ஆகியோர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.