Asianet News TamilAsianet News Tamil

வரதட்சனை தராததால் மனைவியின் ஆபாச படத்தை முகநூலில் வெளியிடுவதாக மிரட்டிய கணவர்; நியாயம் கேட்டு தந்தை தீக்குளிக்க முயற்சி... 

Husband who threatened to wife for not giving dowry father asking justice and try to burn hisself
Husband who threatened to wife for not giving dowry father asking justice and try to burn hisself
Author
First Published May 1, 2018, 10:43 AM IST


திருப்பூர்
 
வரதட்சனை தராததால் கட்டிய மனைவியின் ஆபாச படத்தை முகநூலில் வெளியிடுவதாக மிரட்டிய கணவர் மீது காவல் நிலையத்தில் புகார் கொடுத்தும் நடவடிக்கை எடுக்காததால் நியாயம் கேட்டு தந்தை தீக்குளிக்க முயற்சித்தார்.

திருப்பூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நேற்று காலை நடைபெற்றது. இந்தக் கூட்டத்துக்கு ஆட்சியர் கே.எஸ்.பழனிசாமி தலைமை தாங்கினார். அவரிடம், மக்கள் தங்கள் குறைகளை மனுக்களாக கொடுக்க வந்தனர். 

தீக்குளிப்பு சம்பவங்களை எதுவும் ஏற்படாத வகையில் அதனைத் தடுக்கும் பொருட்டு மனு கொடுக்க வருபவர்களை ஆட்சியர் அலுவலக நுழைவுவாசலில் காவலாளர்கள் தீவிர சோதனை செய்த பின்னரே உள்ளே அனுமதித்தனர். 

இந்த நிலையில், திருப்பூர் பழவஞ்சிப்பாளையம், டீச்சர்ஸ் காலனியைச் சேர்ந்த மாநகராட்சியின் முன்னாள் சுகாதார ஆய்வாளரான முரளிக்கண்ணன் (52), மகன் மோகன்ராம் (20), மகள் மதுபாரதி (26) மற்றும் மதுபாரதியின் 1¼ வயது மகன் வந்திருந்தனர். 

திடீரென்று மூவரும் தாங்கள் கொண்டுவந்த கேனில் இருந்து பெட்ரோலை உடலில் ஊற்றி தீக்குளிக்க முயன்றனர்.  அதற்குள் அங்கிருந்த காவலாளர்கள் அவர்களை தடுத்து நிறுத்தினார்கள். குடங்களில் தண்ணீர் கொண்டுவந்து அவர்கள் மீது ஊற்றினார்கள்.

இதுகுறித்து முரளிக்கண்ணன், "எனது மகள் மதுபாரதிக்கும், மதுரை வாடிப்பட்டியை சேர்ந்த கார்த்திக்குமார் (29) என்பவருக்கும் 29-8-2014 அன்று திருமணம் முடிந்தது. மகளுக்கு 1¼ வயதில் மகன் உள்ளான். 

எனது மகளுக்கும், அவருடைய கணவருக்கும் இடையே குடும்ப தகராறு ஏற்பட்டது. மேலும் வரதட்சணை கேட்டு கொடுமைப்படுத்தி சித்ரவதை செய்ததாக திருப்பூர் தெற்கு மகளிர் காவல் நிலையத்தில் நாங்கள் புகார் அளித்தோம். 

இந்த நிலையில் எனது மகளின் ஆபாச படத்தை முகநூலில் வெளியிடுவதாக கார்த்திக்குமார் மிரட்டி வந்தார். அதுகுறித்தும் புகார் தெரிவித்தோம். ஆனால், காவலாளர்கள் உரிய நடவடிக்கை எடுக்கவில்லை. மாநகராட்சி காவல் ஆணையரை சந்தித்து முறையிட்ட பின்பு காவல் ஆய்வாளர் மீனாகுமாரியிடம் புகார் கொடுத்தோம். ஆனால், அவர் ஒருதலைபட்சமாக நடவடிக்கை மேற்கொண்டு கார்த்திக்குமாருக்கு ஆதரவாக செயல்பட்டார். 

வழக்குப்பதிவு செய்ய காலதாமதப்படுத்தியதுடன் கைது நடவடிக்கை மேற்கொள்ளவில்லை. எங்களுக்கு நியாயம் வேண்டும். கார்த்திக்குமார் மற்றும் அவருடைய தாய், தங்கை ஆகியோர் மீதும், எங்கள் புகார் மீது உரிய நடவடிக்கை எடுக்காத காவல் ஆய்வாளர் மீனாகுமாரி மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும்" என்று அவர் கூறினார்.

மேலும், இதுதொடர்பாக மதுபாரதி திருப்பூர் ஆட்சியரை சந்தித்து மனு கொடுத்து முறையிட்டார். உரிய நடவடிக்கை எடுக்க ஆட்சியர் உத்தரவிட்டதை தொடர்ந்து சமூக நலத்துறை அதிகாரிகள், திருப்பூர் தெற்கு காவலாளர்கள் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவத்தால் ஆட்சியர் அலுவலக வளாகத்தில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

Follow Us:
Download App:
  • android
  • ios