ஆசைக்கு இணங்க மறுத்ததால் ஏற்பட்ட ஆத்திரத்தில் கனகாவையும், குழந்தையையும் கணவனே எரித்துக் கொன்ற சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

விழுப்புரம் மாவட்டம் கள்ளக்குறிச்சி கிராமச் சாவடி பகுதியை சேர்ந்தவர் சரவணன் மாற்றுத்திறனாளி. இவரது மனைவி கனகா. இவர்களுக்கு கார்த்திகா என்ற மகளும், சிவசந்திரன் என்ற 10 மாத ஆண் குழந்தையும் இருந்தனர்.

சரவணன் அதே பகுதியில் உள்ள ஒரு ஆடிட்டரிடம் கணக்காளராக பணியாற்றி வருகிறார். நேற்று முன்தினம் இரவு கனகா, குழந்தை சிவசந்திரன் ஆகியோர் ஒரு அறையிலும், சரவணனும், கார்த்திகாவும் மற்றொரு அறையிலும் படுத்து தூங்கி கொண்டிருந்தனர்.

நேற்று. அதிகாலை “காப்பாற்றுங்கள்... காப்பாற்றுங்கள்...” என பயங்கர அபாயக் குரலில் கனகா எழுப்பினார். சிவசந்திரன் பயங்கர சத்தத்துடன் அழுதுள்ளான் இவர்களின் இந்த கதறலைக் கேட்ட அக்கம் பக்கத்தினர் அங்கு விரைந்து வந்து பார்த்தபோது வீடு முழுவதும் புகை மண்டலமாக இருந்துள்ளது.

கனகா படுத்திருந்த அறையில் பயங்கரமாக தீப்பற்றி எரிந்து கொண்டிருந்தது. அந்த தீயில் சிக்கி கனகாவும், குழந்தை சிவசந்திரனும் உடல் கருகிய நிலையில் பரிதாபமாக கிடந்தனர். இதையடுத்து தீக்காயம் அடைந்த கனகா, சிவசந்திரன் ஆகியோரை மீட்டு சிகிச்சைக்காக அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு சிவசந்திரனை பரிசோதித்த டாக்டர்கள், ஏற்கனவே சிவசந்திரன் இறந்து விட்டதாக தெரிவித்தனர். மேல் சிகிச்சைக்காக விழுப்புரம் முண்டியம்பாக்கம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்ட கனகாவும் சிகிச்சை பலனளிக்காமல் பரிதாபமாக பலியானார்.

இது குறித்து கள்ளக்குறிச்சி போலீசில் புகார் செய்யப்பட்டது. இதனையடுத்து போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று
சரவணனின் வீட்டை பார்வையிட்டு விசாரணை நடத்தினர்.

அப்போது கனகா தனது கைக்குழந்தையுடன் தீக்குளித்து தற்கொலை செய்து கொண்டதாக முதலில் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினார்கள். இதையடுத்து விழுப்புரத்தில் இருந்து தடயவியல் நிபுணர் சண்முகம் வரவழைக்கப்பட்டார். அவர் மோப்பநாய் உதவியுடன் தடயங்களை சேகரித்ததில், வீட்டின் ஜன்னல் மற்றும் சுவர் முழுவதும் கரும்புகை படிந்திருந்ததை கண்டார். அந்த அறிக்கையை போலீசாரிடம் கொடுத்தார். இதனையடுத்து கனகாவின் தாய் நாகவேணியை விசாரித்ததில் தனது மகள் மற்றும் பேரன் சாவில் சந்தேகம் உள்ளது என்று போலீசாரிடம் தெரிவித்தார்.

இதையடுத்து சந்தேக மரணம் என்று போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். கனகாவும் அவரது குழந்தையும் எரித்து கொல்லப்பட்டனரா? என்ற கோணத்தில் கனகாவின் கணவர் சரவணன், அவரது அண்ணன் ரவிச்சந்திரன், மற்றும் உறவினர்களிடம் போலீசார் தீவிர விசாரணை விசாரித்ததில் சரவணன் தனது மனைவி மற்றும் குழந்தையை பெட்ரோல் ஊற்றி எரித்து கொன்றது தெரியவந்தது.

போலீசில் சரவணன் கூறும்போது; ஆசைக்கு இணங்க மறுத்ததால் ஏற்பட்ட ஆத்திரத்தில் கனகாவையும், குழந்தையையும் எரித்து கொன்றேன் என கூறியுள்ளார்.