பள்ளிபாளையம்,

பள்ளிபாளையம் அருகே, மனைவியை துப்பாக்கியால் சுட்டு கொன்றுவிட்டு, துப்பாக்கியுடன் கணவன் காவல் நிலையத்தில் சரணடைந்தார். சந்திரசேகரன், ஜோதிமணி ஆகிய இருவரும் ஓமலூர் என்ஜினீயர் கோகுல்ராஜ் கொலை வழக்கில் கைதாகி சிறை சென்று ஜாமீனில் வெளியே வந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

நாமக்கல் மாவட்டம் பள்ளிபாளையம் அருகே அப்பநாயக்கன் பாளையத்தைச் சேர்ந்தவர் சந்திரசேகரன் (43). தனியார் காகித ஆலையில் வேலை பார்த்து வருகிறார். தற்போது காகித ஆலை காலனியில் குடும்பத்துடன் வாழ்ந்து வந்தார்.

இவருடைய மனைவி ஜோதிமணி (43). இவர்களுக்கு இரண்டு பெண் குழந்தைகள் இருக்கின்றனர்.

சந்திரசேகரன் தனக்குச் சொந்தமான நிலங்களில் பெரும்பாலானவற்றை விற்றுவிட்டார். இதனால் சந்திரசேகரனின் தந்தை துரைசாமி, இரண்டு ஏக்கர் நிலத்தை ஜோதிமணியின் தாயாரும். தனது சகோதரியுமான பழனியம்மாள் பெயருக்கு எழுதிக் கொடுத்துள்ளார்.

இந்த நிலையில் நேற்று மதியம் சந்திரசேகரனும், ஜோதிமணியும் அப்பநாயக்கன் பாளையத்தில் உள்ள தோட்டத்திற்குச் சென்று அங்குள்ள வீட்டில் இருந்தனர்.

அப்போது இருவருக்கும் சொத்து எழுதியது தொடர்பாக தகராறு ஏற்பட்டுள்ளது.

ஒருகட்டத்தில் இந்த தகராறு முற்றியது. சந்திரசேகரன் வீட்டில் வைத்திருந்த துப்பாக்கியை எடுத்து ஜோதிமணியின் கழுத்தில் சுட்டார்.

இதில் ஜோதிமணி குண்டு பாய்ந்து சம்பவ இடத்திலேயே துடிதுடித்து இரத்த வெள்ளத்தில் பரிதாபமாக உயிரிழந்தார்.

பின்னர் சந்திரசேகரன் பள்ளிபாளையம் காவல் நிலையத்தில் துப்பாக்கியுடன் சரணடைந்தார்.

இதனையடுத்து பள்ளிபாளையம் காவல் ஆய்வாளர் அசோக்குமார், திருச்செங்கோடு ஆய்வாளர் பழனிசாமி மற்றும் காவலாளர்கள் சம்பவ இடத்திற்குச் சென்று இறந்து கிடந்த ஜோதிமணியைப் பார்த்தனர்.

பின்னர், ஜோதிமணியின் உடலை உடற்கூராய்வுக்காக பள்ளிபாளையம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

சந்திரசேகரனிடம் இருந்த துப்பாக்கியை காவலாளர்கள் பறிமுதல் செய்து அவரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.

இதற்கிடையில் திருச்செங்கோடு துணை காவல் கண்காணிப்பாளர் சுரேஷ்குமார் சம்பவ இடத்திற்கு நேரில் சென்று விசாரித்தார்.

தற்போது, சொத்துத் தகராறில் கணவனால், மனைவி சுட்டுக் கொலைச் செய்யப்பட்ட சம்பவம் அந்த பகுதி மக்களிடையே பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.