கணவன் தீபாவளி பண்டிகைச் சீர்வரிசைக் கேட்டதால் மனமுடைந்த மனைவித் தீக்குளித்து தற்கொலைச் செய்துக் கொண்டார். இருவரும் காதல் திருமணம் செய்துகொண்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.
திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி அருகே உள்ள அரசூரைச் சேர்ந்த தொழிலாளி மகேந்திரன். இவர் அதே பகுதியைச் சேர்ந்த காளியப்பன் மகள் ஜமுனாராணி (23) என்பவரை காதலித்து இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு குழந்தைகள் இல்லை.
கடந்த சில நாள்களுக்கு முன்பு மகேந்திரன் தனது மனைவி ஜமுனாராணியிடம், தீபாவளி பண்டிகைக்கு தாய் வீட்டில் இருந்து சீர்வரிசை வாங்கி தர வேண்டும் என கேட்டு தகராறு செய்துள்ளார். காதலித்து திருமணம் செய்த கணவர் சீர்வரிசை கேட்டு தகராறில் ஈடுபடுவதை ஜமுனாராணியால் ஏற்றுக் கொள்ள முடியவில்லை. இதனால் மனம் உடைந்தார்.
இந்த நிலையில் ஜமுனாராணி உடலில் மண்எண்ணெய் ஊற்றி பற்ற வைத்துக் கொண்டார். இதில் உடல் கருகி மிகவும் ஆபத்தான நிலையில், அக்கம்பக்கத்தினர் அவரை மீட்டு மன்னார்குடி அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். பின்னர் அவரை மேல்சிகிச்சைக்காக தஞ்சை அரசு மருத்துவகல்லூரி மருத்துவமனையில் அனுமதித்தனர்.
அங்கு சிகிச்சை பலனின்றி செவ்வாய்க்கிழமை ஜமுனாராணி பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து மன்னார்குடி தாலுகா காவல் சப்–இன்ஸ்பெக்டர் அனந்த கிருஷ்ணன் மற்றும் காவலாளர்கள் வழக்குப்பதிவுச் செய்துள்ளனர்.
திருமணமாகி 2 ஆண்டுகளே ஆன நிலையில் ஜமுனாராணி தீக்குளித்துத் தற்கொலைச் செய்துக் கொண்டதால் மன்னார்குடி உதவி ஆட்சியர் செல்வசுரபி, ஜமுனாராணியின் கணவர் மகேந்திரனிடம் விசாரணை நடத்தி வருகிறார்.
