புதுக்கோட்டை மாவட்டம், ஆலங்குடி அருகே கூழையன்காடு கிராமத்தைச் சேர்ந்தவர் நடேசன். இவரது மனைவி நிர்மலா. நடேசனின் மனைவி நிர்மலா கடந்த 10 ஆம் தேதி அன்று தற்கொலை செய்து கொண்டுள்ளார். நிர்மலாவின் சாவுக்கு காரணம், நடேசன்தான், என்றும் அவரை கைது செய்ய வேண்டும் என்றும் நிர்மலாவின் உறவினர்கள் கடந்த 11 ஆம் தேதி அன்று சாலை மறியல் நடத்தினர்.

உயிரிழந்த நிர்மலா உறவினர்களின் சாலை மறியலை அடுத்து, தலைமறைவாக இருந்த அவரது கணவன் நடேசனை, அவரது உறவினர்கள் மூலம் பேசி, போலீசார் ஊருக்கு வரவழைத்தனர். இதையடுத்து, அவரை போலீசார் நேற்று மாலை கைது செய்தனர். 

இது குறித்து போலீசார் கூறும்போது,  அரசுப் பள்ளிகளில் ஆசிரியராக வேலை பார்த்து வருகிறார் நடேசன். இவருக்கும் நிர்மலாவுக்கும் திருமணமாகி 11 ஆண்டுகள் கடந்த நிலையிலும் அவர்களுக்கு குழந்தை இல்லை. இது சம்பந்தமாக நிர்மலா, குழந்தையை தத்தெடுத்து வளர்க்கலாம் என்று கணவனிடம் கூறியுள்ளார். ஆனால், அதற்கு நடேசன் ஒப்புக்கொள்ளவில்லை.

அதற்கு மாறாக, நடேசன் இன்னொரு திருமணம் செய்து கொள்வதற்கான முயற்சிகளில் இறங்கியிருக்கிறார். மனைவி உயிருடன் உள்ளபோது, இன்னொரு திருமணம் செய்துகொள்ள சட்டத்தில் இடமில்லை. மனைவியிடம் இருந்து விவாகரத்து பெற்றால் மட்டுமே மறு திருமணம் செய்து கொள்ள முடியும். எனவே, மனைவி நிர்மலாவிடம் இருந்து விவாகரத்து பெறும் முயற்சியில் இறங்கியுள்ளார். கணவரின் செயலால், நிர்மலா மனமுடைந்து காணப்பட்டார்.

இது குறித்து நிர்மலா உறவினர்களிடம் கூறியுள்ளார். அவர்களும் சமாதானம் செய்து விட்டு சென்றுள்ளனர். கடந்த 10 ஆம் தேதி அன்று காலை நடேசன் திருச்சிக்கு சென்றிருக்கிறார். அப்போது வீட்டில் நிர்மலாவைத் தவிர வேறு யாரும் இல்லை. அந்த சூழ்நிலையில் நிர்மலா தற்கொலை செய்து கொண்டிருக்கிறார்.

நிர்மலா தற்கொலை செய்து கொண்ட தகவலை அறிந்த நடேசன், திருச்சியிலேயே தலைமறைவாக இருந்துள்ளார். ஊருக்கு திரும்ப வரவில்லை. தனது செல்போனையும் சுவிட் ஆப் செய்துள்ளார். இந்த நிலையில்தான், அவரது உறவினர்களுடன் பேசி, நடேசனை ஊருக்கு வரவழைத்தோம். நடேசன் மீது தற்கொலைக்கு தூண்டுதல் பிரிவுகளின்கீழ் அவரை கைது செய்துள்ளோம் என்று போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.