குடும்பம் நடத்த வர மறுத்து, தாய் வீட்டில் தஞ்சம் அடைந்த மனைவியை 11வது மாடியில் இருந்து கணவன் தள்ளிவிட்டு கொலை செய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

சென்னை கொடுங்கையூர் சேலைவாயல் பகுதியை சேர்ந்தவர் ராஜ்கண்ணு  அம்பத்தூர் அடுத்த கொரட்டூர் கெனால் ரோட்டில் வசிக்கும் தனது அக்கா சுகுணாவின் மகள் ஜெயசுதா  என்பவரை திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு தர்சன், அருண் என்ற 2 மகன்கள் உள்ளனர்.

இந்நிலையில், ஜெயசுதாவுக்கும், வாலிபர் ஒருவருக்கும் இடையே கள்ளத்தொடர்பு இருந்ததாக தெரிகிறது. இதை கணவர் ராஜ்கண்ணு தட்டிக்கேட்டதால் கடந்த ஒன்றரை ஆண்டுகளுக்கு முன்பு ஜெயசுதா கோபித்துக்கொண்டு, கொரட்டூர் கெனால் ரோட்டில் 11 மாடி அடுக்குமாடி குடியிருப்பில் வசிக்கும் தாய் சுகுணா வீட்டிற்கு சென்று, தனது இரு மகன்களுடன் வசித்துவந்தார்.

இதையடுத்து, ராஜ்கண்ணு பலமுறை ஜெயசுதாவை குடும்பம் நடத்த வீட்டுக்கு வருமாறு   அழைத்தபோதும் ஜெயசுதா மறுத்துள்ளார். 

இந்நிலையில், நேற்று முன்தினம் இரவு 10.15 மணியளவில், தனது அக்கா சுகுணா வீட்டுக்கு வந்த ராஜ்கண்ணு, ‘உங்கள் மகள் மற்றும் குழந்தைகளை என்னுடன் வருமாறு சொல்லுங்கள்’ என அக்கா சுகுணாவிடம் கூறியுள்ளார். அதற்கு அக்கா, ‘‘நீங்கள் இருவரும் பேசி, ஒரு முடிவுக்கு வாருங்கள்’’ என கூறிவிட்டு, அவரது மகன் கார்த்திக்குடன் ஹாலில் பேசிக்கொண்டிருந்தார். அங்கு பேச்சுவார்த்தை நடத்திய தம்பதி இடையே கடுமையாக வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இந்த தகராறில், ஆத்திரம் அடைந்த ராஜ்கண்ணு மனைவி ஜெயசுதாவை வீட்டின் ஜன்னல் வழியாக 11வது மாடியில் இருந்து கீழே தள்ளி விட்டுள்ளார். ஜெயசுதாவின் அலறல் சத்தம்கேட்டு சுகுணா மற்றும் கார்த்திக் இருவரும் அக்கம் பக்கத்தினருடன் கீழே ஓடி வந்து பார்த்தபோது  ஜெயசுதா மண்டை உடைந்து ரத்த வெள்ளத்தில் உயிருக்கு போராடியதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.

உடனடியாக அக்கம் பக்கத்தினர் உதவியுடன் ஜெயசுதாவை மீட்டு, சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு ஜெயசுதாவை பரிசோதனை செய்த டாக்டர்கள், வழியிலேயே அவர் இறந்துவிட்டதாக தெரிவித்தனர். கொலை வழக்குப்பதிவு செய்து, ராஜ்கண்ணுவை கைது செய்து விசாரணை நடத்தி வருகிறார்.