பெரம்பலூரில் கணவன் – மனைவி கூட்டாக சேர்ந்து மதுப்பாட்டில்கள் கடத்தியதால் இருவரும் தனிப்படை அமைக்கப்பட்டு காவலாளர்களால் கைது செய்யப்பட்டனர்.

பெரம்பலூர் மாவட்டம் மங்களமேடு அருகே வல்லாபுரம் பகுதியில் மங்களமேடு காவலாளர்கள் சுற்றுப் பணியில் ஈடுபட்டிருந்தனர்.

அப்போது அங்கு மோட்டார்சைக்கிளில் கணவன் – மனைவி வந்து கொண்டிருந்தனர். அவர்கள் மீது சந்தேகம் ஏற்பட்டு காவலாளர்கள் அவர்களை தடுத்து நிறுத்தியபோது கணவர் தப்பி ஓடிவிட்டார்.

பிடிபட்ட பெண்ணிடம் விசாரித்த போது அவர், பெரம்பலூர் அருகே எசனை கிராமம் பாப்பாங்கரையை சேர்ந்த சுரேஷ் மனைவி சங்கீதா (26) என்பதும், மது பாட்டில்களை கடத்தியதும் தெரிய வந்தது.

அவரிடமிருந்து 48 மது பாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டன. இதையடுத்து போலீசார் வழக்குப்பதிவு செய்து சங்கீதாவை கைது செய்தனர்.

இந்த நிலையில் தப்பியோடிய சுரேஷை பிடிக்க பெரம்பலூர் மதுவிலக்குபிரிவு காவல் இன்ஸ்பெக்டர் சிவக்குமார் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டது.

திங்கள்கிழமை இரவு தனிப்படை காவலாளர்கள் பெரம்பலூர் அருகே செங்குணம் பிரிவு சாலையில் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அந்த வழியாக வந்த காரை தடுத்து நிறுத்தி சோதனையிட்ட போது அதில் 120 புதுச்சேரி பீர் பாட்டில்கள் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.

இதையடுத்து காரிலிருந்த நபரை பிடித்து விசாரித்த போது அவர், பெரம்பலூர் அருகே எசனை கிராமம் பாப்பாங்கரையை சேர்ந்த சுரேஷ் (28) என்பதும், ஏற்கனவே மங்களமேடு காவலாளரால் கைது செய்யப்பட்ட சங்கீதாவின் கணவர் என்பதும் தெரிய வந்தது.

மேலும் சுரேஷ் அளித்த தகவலின்பேரில் நான்கு ரோடு பகுதியிலுள்ள ஒரு ஓட்டலில் காவலாளர்கள் சோதனையிட்ட போது அங்கு பதுக்கி வைக்கப்பட்டிருந்த 744 புதுச்சேரி பீர் பாட்டில்கள் இருந்தது தெரிய வந்தது.

இதையடுத்து சுரேஷிடமிருந்து மொத்தம் 864 பீர்பாட்டில்கள், கார் ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டது. காவலாளர்கள் அவரை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.