Hurricane winds in Krishnagiri with heavy winds Trees houses electrical poles damage

கிருஷ்ணகிரியில் பலத்த சூறாவளி காற்றுடன் பெய்த ஆலங்கட்டி மழையால் மரங்கள், மின் கம்பங்கள் சாய்ந்தன. வீடுகளின் மேற்கூரைகள், மாட்டுக் கொட்டைகள் சூறாவளிக் காற்றுக்கு தூக்கி வீசப்பட்டன். சேதமடைந்தது.

கிருஷ்ணகிரி மாவட்டம், போச்சம்பள்ளி சுற்று வட்டாரத்தில் இருக்கும் சந்தூர் மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளில் கடந்த இரண்டு நாள்களாக அதிக காற்றுடன் கூடிய பெரும் மழை பெய்தது.

நேற்று பிற்பகல் 3.30 மணியளவில் ஆலங்கட்டி மழை பெய்தபோது வீசிய சூறாவளி காற்றால் மாட்டுக் கொட்டகைகள், குடிசையின் மேற்கூரைகள் போன்றவை காற்றில் தூக்கி வீசப்பட்டன. வீடுகளின் மண்சுவர்களும் இடிந்து விழுந்து பெருத்த சேதமும் ஏற்பட்டன.

பெரும் சூறாவளி காற்றுடன் பெய்த மழையால் தென்னை உள்ளிட்ட ஏராளமான மரங்கள் சாய்ந்தன. மாமரங்களில் இருந்த மாங்காய்கள் காற்றில் விழுந்தன.

இந்த சூறாவளிக் காற்று மற்றும் மழை பற்றி தகவலறிந்ததும் போச்சம்பள்ளி தாசில்தார் பண்டரிநாதன், கிராம நிர்வாக அலுவலர் ராஜேஷ்சர்மா மற்றும் அதிகாரிகள் அங்குச் சென்று சேதத்தை ஆய்வுச் செய்தனர்.

இந்த பலத்த சூறாவளி காற்றுக்கு ஏராளமான மின் கம்பங்களும் சாய்ந்தன. இதனால் அந்த பகுதி முழுவதும் மின்சாரம் துண்டிக்கப்பட்டது. அங்கு மின் கம்பங்களை அகற்றி புதிய மின் கம்பங்களை பொருத்தும் பணியில் மின்வாரிய ஊழியர்கள் தற்போது ஈடுபட்டுள்ளனர்.

சந்தூரில் நேற்று சூறாவளி காற்றுடன் பெய்த ஆலங்கட்டி மழையால் மக்களுக்கும், விவசாயிகளுக்கும் அதிக அளவில் நஷ்டம் ஏற்பட்டுள்ளது.

அதேசமயம் கிருஷ்ணகிரி மாவட்டத்தில் நேற்று மாலை பரவலாக மழை பெய்ததால் மக்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.