கச்சிராயப்பாளையம்,

வனவிலங்குகளை வேட்டையாட நாட்டுத் துப்பாக்கிகளுடன் சென்ற 2 பேர் கைது செய்யப்பட்டனர். ஒருவர் தப்பி ஓட்டம்.

கச்சிராயப்பாளையம் அருகே வெள்ளிமலை வனவர் முருகானந்தம் தலைமையிலான வனத்துறையினர், சுத்துமலை வனப்பகுதியில் வியாழக்கிழமை காலை சுற்றுப்பார்வை மேற்கொண்டனர்.

அப்போது அங்கு நாட்டுத் துப்பாக்கிகளுடன் மூன்று பேர் நடந்துச் சென்றுக் கொண்டிருந்தனர். அவர்கள் வனத்துறையினர் வருவதை பார்த்ததும், நாட்டுத்துப்பாக்கிகளை அங்கேயே போட்டுவிட்டு தப்பி ஓடினர்.

அதனை பார்த்த வனத்துறையினர் அவர்களை துரத்திச் சென்று அதில் இரண்டு பேரை மடக்கிப் பிடித்தனர். ஒருவர் விரைந்து தப்பி ஓடி தலைமறைவானார். இதையடுத்து பிடிபட்ட இரண்டு பேரிடம் வனத்துறையினர் விசாரணை நடத்தினர்.

அந்த விசாரணையில் அவர்கள் கரியாலூரை சேர்ந்த அண்ணாமலை மகன் தங்கராஜ் (37), புதுவலவு கிராமத்தை சேர்ந்த அண்ணாமலை மகன் பொன்னன் (37) என்பதும், தப்பிச் சென்றவர் புதுவலவு கிராமத்தை சேர்ந்த பழனி (40) என்பதும் தெரியவந்தது.

மேலும் தங்கராஜ், பழனி, பொன்னன் ஆகிய மூன்று பேரும் வனவிலங்குகளை வேட்டையாடுவதற்காக நாட்டுத் துப்பாக்கிகளுடன் வந்துள்ளனர் என தெரிந்தது.

இதையடுத்து மூன்று நாட்டுத் துப்பாக்கிகளையும் வனத்துறையினர் பறிமுதல் செய்ததோடு, தங்கராஜ், பொன்னன் ஆகிய இரண்டு பேரையும் கைது செய்தனர். மேலும் தப்பிச் சென்ற பழனியை வலைவீசி தேடி வருகின்றனர்.

கடந்த இரண்டு நாள்களுக்கு முன்பு அக்கராப்பாளையம் அருகே கச்சிராயப்பாளையம் காவல்துறையினர் ரோந்து பணியில் ஈடுபட்டபோது அங்கு மோட்டார் சைக்கிளில் வந்த மர்மநபர்கள் இரண்டு பேர் காவலரைப் பார்த்ததும், தாங்கள் கொண்டு வந்த நாட்டுத் துப்பாக்கி ஒன்றை அங்கேயே வீசிவிட்டு தப்பிச் சென்றனர். இதையடுத்து காவலர்கள் அந்த நாட்டுத் துப்பாக்கியை பறிமுதல் செய்து, தப்பிச்சென்றவர்களை வலை வீசி தேடி வருகின்றனர்.

கல்வராயன்மலை பகுதியில் அடுத்தடுத்து நாட்டுத் துப்பாக்கிகள் பறிமுதல் செய்யப்பட்டு வருவதால் காவல்துறையினர் குழப்பத்தில் இருக்கின்றனர்.