hunting guns explosives knives are seized in farmer house
நாமக்கல்
நாமக்கல்லில் விலங்குகளை வேட்டையாடப் பயன்படுத்திய மூன்று நாட்டுத் துப்பாக்கிகள் வெடிப் பொருட்கள், கத்திகள் போன்றவை விவசாயி வீட்டில் இருந்து பறிமுதல் செய்யப்பட்டது. பதுக்கியவர் தலைமறைவானார்.
நாமக்கல் மாவட்டம், இராசிபுரம் அருகேயுள்ள மங்களபுரம் பகுதியில் சிலர் நாட்டுத் துப்பாக்கிகளை பதுக்கி வைத்துக் கொண்டு காட்டு விலங்குகளை வேட்டையாடுவதாக வனத்துறையினருக்கு தகவல் கிடைத்தது.
இதனையொட்டி நாமக்கல் மாவட்ட வன அலுவலர் டாக்டர் காஞ்சனா உத்தரவு ஒன்றைப் பிறப்பித்தார். அதன்படி இராசிபுரம் வனச்சரக அலுவலர் தங்கராஜ், வாழப்பாடி வனச்சரக அலுவலர் சந்திரசேகரன் ஆகியோர் தலைமையில் வனத்துறையினர் மங்களபுரம் பகுதியில் நேற்று சோதனையில் ஈடுபட்டனர்.
அப்போது பறவைக்காடு என்ற இடத்தில் விவசாயி பூபதி (55) என்பவரது வீட்டில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த மூன்று நாட்டுத் துப்பாக்கிகளை வனத்துறையினர் பறிமுதல் செய்தனர்.
மேலும், அவரது வீட்டில் விலங்குகளை வேட்டையாடி கொல்லப் பயன்படுத்தப்படும் 23 வெடிப் பொருட்களும், இரண்டு கத்திகளையும் பதுக்கி வைக்கப்பட்டு இருந்ததை வனத்துறையினர் கண்டுபிடித்தனர்.
இதனையடுத்து அந்த வெடிப் பொருட்களையும், கத்திகளையும் வனத்துறையினர் பறிமுதல் செய்து மங்களபுரம் காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர்.
மங்களபுரம் காவலாளர்கள் தலைமறைவான விவசாயி பூபதியை தேடி வருகின்றனர்.
