Hundreds of people have been blocked by the road for proper water supply
கன்னியாகுமரி
குடிநீர் விநியோகத்தை முறைபடுத்த வேண்டும் என்று நூற்றுக்கும் மேற்பட்ட மக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
கன்னியாகுமரி அருகே உள்ள கொட்டாரம் பேரூராட்சியில் மொத்தம் 15 வார்டுகள் உள்ளன. இந்தப் பகுதி மக்களுக்கு கிணறுகளில் இருந்து குடிநீர் விநியோகம் செய்யப்பட்டது. தற்போது நிலவும் கடுமையான வறட்சிக் காரணமாக கிணறுகள் தூர்ந்துப் போனதால் குடிநீர் விநியோகம் செய்வதில் தடை ஏற்பட்டது.
முன்பெல்லாம் இரண்டு நாள்கள், ஐந்து நாள்கள் இடைவெளிவிட்டு குடிநீர் விநியோகம் செய்யப்பட்டது. தற்போது பத்து நாள்களாகியும் பல இடங்களில் குடிநீர் விநியோகம் செய்யப்படவில்லை. இதனால் மக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர்.
எனவே, குடிநீர் விநியோகத்தைச் சீராக்க வேண்டி நேற்றுக் காலை கொட்டாரம் பேரூராட்சி அலுவலகம் முன்பு ஆண்கள், பெண்கள் என நூற்றுக்கும் மேற்பட்டோர் திரண்டனர்.
பெண்கள் வெற்றுக் குடங்களை ஏந்தியபடி கன்னியாகுமரி - நாகர்கோவல் சாலையில் அமர்ந்து மறியலில் ஈடுபட்டனர். அவர்கள், “குடிநீர் விநியோகத்தை முறைபடுத்த வேண்டும்” என்று முழக்கங்களை எழுப்பி ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
இதுகுறித்து தகவலறிந்த கன்னியாகுமரி காவல் துணை கண்காணிப்பாளர் வேணுகோபால் மற்றும் காவலாளர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து அவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினர்.
பேச்சுவார்த்தையில் “சீராக குடிநீர் விநியோகம் செய்ய உடனடியாக நடவடிக்கை எடுக்கிறோம்” என்று அதிகாரிகள் கூறியதையடுத்து அவர்கள் சாலை மறியலை கைவிட்டனர்.
