சிவகங்கை

மனிதநேயமிக்க பெற்றோர் மற்றும் ஆசிரியர்களால்தான் மனிதநேயமிக்க மாணவர்களை உருவாக்க முடியும் என்று காரைக்குடி அழகப்பா பல்கலைக்கழக துணைவேந்தர் சொ.சுப்பையா தெரிவித்தார்.

சிவகங்கை மாவட்டம், காரைக்குடி வித்யாகிரி மெட்ரிக். மேல்நிலைப் பள்ளியில் நேற்றிரவு மாணவ, மாணவிகளுக்கு ஆண்டுவிழா நடைப்பெற்றது.

இதில்,  காரைக்குடி அழகப்பா பல்கலைக்கழக துணைவேந்தர் சொ.சுப்பையா கலந்து கொண்டு மாணவ, மாணவிகளுக்கு பரிசுகளை வழங்கினார். பின்னர், அவர் பேசியது: "கல்வி என்பது வீட்டிலிருந்துதான் தொடங்குகிறது. 

பெற்றேர்கள் எப்படி நடந்து கொள்கிறார்கள் என்பதை முதலில் குழந்தைகள் கவனிக்கின்றனர்.  எனவே, பெற்றோர்கள் அரவணைப்பும், அன்பும் செலுத்தி கண்காணிக்க வேண்டும். 

பெற்றோர் மற்றும் ஆசிரியர்கள் மனிதநேயமிக்கவர்களாக இருந்தால்தான் மனிதநேயமிக்க மாணவர்களை உருவாக்க முடியும்.  

மாணவர்கள் விரும்பும் துறையில் ஆர்வம் ஏற்படுத்த வேண்டும். அவர்களின் திறமையைக் கண்டறிந்து தட்டிக் கொடுத்து வளர்ப்பது ஆசிரியர்கள், கல்வி நிறுவனங்களின் கடமையாகும்" என்று அவர் பேசினார்.

இந்த விழாவில் தேவகோட்டை மாவட்டக்கல்வி அலுவலர் மாரிமுத்து, பள்ளித் தாளாளர் ஆர்.சுவாமிநாதன் ஆகியோர் பேசினர்.  பள்ளியின் முதல்வர் ஹேமமாலினி ஆண்டறிக்கை சமர்ப்பித்தார். 

பள்ளியின் பொருளாளர் முகம்மது மீரா, லதா கிருஷ்ணன், பொறியாளர் எஸ். ராமகிருஷ்ணன் ஆகியோர் முன்னிலைவகித்தனர். இந்த விழாவில், பள்ளி மாணவ, மாணவிகளின் கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றன. 

பெற்றோர்கள், ஆசிரியர்கள், நகரின் முக்கியப்பிரமுகர்கள், மாணவ, மாணவிகள் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர். விழாவின் இறுதியில் பள்ளி ஒருங்கிணைப்பாளர் ஹென்றி பாஸ்கர் நன்றித் தெரிவித்தார்.