சானாதனத்தை ஒழிக்க வேண்டும்: வலுக்கும் எதிர்ப்பு - உதயநிதி பதிலடி!

சானாதனத்தை ஒழிக்க வேண்டும் என்ற தமிழ்நாடு அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பேச்சுக்கு எதிர்ப்புகள் வலுத்து வருகின்றன

Huge Row over udhayanidhi stalin Sanatana Dharma speech

தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்கம் சார்பில் 'சனாதன ஒழிப்பு மாநாடு' நேற்று நடைபெற்றது. சென்னை தேனாம்பேட்டையில் உள்ள காமராஜர் அரங்கில் நடைபெற்ற இந்த மாநாட்டில் கலந்து கொண்ட தமிழக இளைஞர் நலன் மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், சனாதன எதிர்ப்பு மாநாடு என்று போடாமல் சனாதன ஒழிப்பு மாநாடு என்று போட்டிருப்பதால் இந்த மாநாட்டின் தலைப்பே தன்னை ஈர்ப்பதாக தெரிவித்தார்.

சிலவற்றை மட்டும்தான் எதிர்க்க வேண்டும். சிலவற்றை ஒழித்தே தீர வேண்டும். அந்த வகையில், சனாதனம் என்பதை எதிர்ப்பதை விட ஒழிப்பதே சரியாகும் என்று தெரிவித்த உதயநிதி ஸ்டாலின், டெங்கு, மலேரியா இவற்றையெல்லாம் நாம் எதிர்க்ககூடாது ஒழித்து கட்ட வேண்டும், அதைப்போல தான் இந்த சனாதனமும் அதை எதிர்க்க கூடாது; ஒழிக்க வேண்டும் என்று பேசினார்.

டெங்கு, மலேரியா, கொரோனா மாதிரி சனாதனத்தையும் ஒழிக்கணும்! உதயநிதி ஸ்டாலின் அனல் பறக்கும் பேச்சு

சனாதனம் என்பது இயல்பாகவே பிற்போக்குத்தனமானது, சாதி மற்றும் பாலினத்தின் அடிப்படையில் மக்களைப் பிரிக்கிறது; சமத்துவம் மற்றும் சமூக நீதிக்கு எதிரானது என்றும் உதயநி ஸ்டாலின் சுட்டிக்காட்டினார்.

உதயநிதி ஸ்டாலினின் இந்த பேச்சுக்கு இந்து அமைப்புகளும், பாஜகவினரும் கடுமையாக எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். ஆங்கில ஊடகங்களில் உதயநிதி ஸ்டாலின் தலைப்பு செய்தியாகியுள்ளார். அவர் மீது வழக்குப்பதிவு செய்யவுள்ளதாக பலரும் தெரிவித்து வருகின்றனர்.

பாஜக தகவல் தொழில்நுட்ப பிரிவு தலைவர் அமித் மால்வியா, “தமிழ்நாடு முதல்வரின் மகனும், அமைச்சருமான உதயநிதி ஸ்டாலின் சனாதன தர்மத்தை மலேரியா மற்றும் டெங்குவுடன் இணைத்து பேசியுள்ளார். அதை வெறுமனே எதிர்க்கக்கூடாது ஒழிக்க வேண்டும் என்று அவர் கருத்து தெரிவித்துள்ளார். சுருக்கமாகச் சொன்னால், சனாதன தர்மத்தைப் பின்பற்றும் பாரதத்தின் 80 சதவீத மக்களை இனப்படுகொலை செய்ய வேண்டும் என அவர் அழைப்பு விடுக்கிறார். திமுக எதிர்க்கட்சிகளின் கூட்டணியில் முக்கிய உறுப்பினராகவும், காங்கிரஸின் நீண்டகால கூட்டாளியாகவும் உள்ளது. இதுதான் மும்பை சந்திப்பில் ஒப்புக் கொள்ளப்பட்டதா?” என கண்டனம் தெரிவித்துள்ளார்.

“இந்த பேச்சுக்க்கு காங்கிரஸின் மவுனம் இந்த இனப்படுகொலை அழைப்புக்கு அக்கட்சி ஆதரவாக உள்ளதையே காட்டுகிறது. இந்தியக் கூட்டணிக்கு வாய்ப்பு கிடைத்தால், பாரதம் என்ற பல்லாயிரம் ஆண்டுகள் பழமையான நாகரீகத்தை அழித்துவிடும்.” எனவும் அமித் மால்வியா தெரிவித்துள்ளார்.

 

 

அமித் மால்வியாவின் இந்த பதிவுக்கு விரிவாக விளக்கம் அளித்துள்ள உதயநிதி ஸ்டாலின், “சனாதன தர்மத்தைப் பின்பற்றும் மக்களை இனப் படுகொலை செய்ய வேண்டும் என நான் ஒருபோதும் அழைப்பு விடுக்கவில்லை. சனாதன தர்மம் என்பது சாதி மற்றும் மதத்தின் பெயரால் மக்களை பிரிக்கும் கொள்கை. சனாதன தர்மத்தை வேரோடு பிடுங்குவது மனித நேயத்தையும் மனித சமத்துவத்தையும் நிலைநிறுத்துவதாகும்.

நான் பேசிய ஒவ்வொரு வார்த்தையிலும் உறுதியாக நிற்கிறேன். சனாதன தர்மத்தால் பாதிக்கப்படும் ஒடுக்கப்பட்ட மற்றும் ஒதுக்கப்பட்ட மக்களின் சார்பாக நான் பேசினேன். சனாதன தர்மம் மற்றும் சமூகத்தில் அதன் எதிர்மறையான தாக்கம் குறித்து ஆழமான ஆய்வுகளை மேற்கொண்ட பெரியார் மற்றும் அம்பேத்கர் ஆகியோரின் விரிவான எழுத்துக்களை எந்த மன்றத்திலும் சமர்ப்பிக்க நான் தயாராக இருக்கிறேன்.

எனது உரையின் முக்கிய அம்சத்தை மீண்டும் வலியுறுத்துகிறேன்: கொசுக்களால் கொரோனா, டெங்கு, மலேரியா போன்ற நோய்கள் பரவுவது போல, பல சமூகக் கேடுகளுக்கு சனாதன தர்மம்தான் காரணம் என்று நான் நம்புகிறேன். நீதிமன்றமாக இருந்தாலும் சரி, மக்கள் மன்றமாக இருந்தாலும் சரி, எனக்கு வரும் சவால்களை எதிர்கொள்ள நான் தயாராக இருக்கிறேன். பொய்யான செய்திகளை பரப்புவதை நிறுத்துங்கள்.” என பதிலடி கொடுத்துள்ளார்.

 

 

“மாநிலத்தின் மொத்த உள்நாட்டு உற்பத்தியைத் தாண்டிச் செல்வத்தைக் குவிப்பதுதான் கோபாலபுரம் குடும்பத்தின் ஒரே எண்ணம். கிறிஸ்தவ மிஷனரிகளிடம் இருந்து பெறப்பட்ட யோசனைகளின் சித்தாந்தத்தை நீங்களும், உங்கள் தந்தையும் கொண்டுள்ளீர்கள். தமிழகம் ஆன்மிக பூமி. இதுபோன்ற நிகழ்வில் மைக்கைப் பிடித்து உங்கள் விரக்தியை வெளிப்படுத்துவதுதான் உங்களால் செய்ய முடிந்தது.” என பாஜக மாநில தலைவர் அண்ணாமலை கண்டனம் தெரிவித்துள்ளார்.

 

 

மேலும், உதயநிதி ஸ்டாலின் மீது வழக்குப்பதிவு செய்யப்பட வேண்டும். நீங்கள் தண்டிக்காமல் இருக்கப்பட கூடாது எனவும் சிலர் உதயநிதிக்கு எதிராக கருத்து தெரிவித்து வருகின்றனர். அதற்கு பதிலடி கொடுத்துள்ள உதயநிதி ஸ்டாலின், “எந்த சட்டச் சவாலையும் சந்திக்க தயாராக இருக்கிறேன். இதுபோன்ற வழக்கமான காவி மிரட்டல்களுக்கு நாங்கள் பயப்பட மாட்டோம். பெரியார், அண்ணா, கலைஞரின் சீடர்களான நாங்கள், முதல்வர் ஸ்டாலினின் வழிகாட்டுதலின் கீழ் சமூக நீதியை நிலைநாட்டவும், சமத்துவ சமுதாயத்தை நிலைநாட்டவும் என்றென்றும் போராடுவோம். திராவிட மண்ணிலிருந்து சனாதன தர்மத்தை ஒழிக்க வேண்டும் என்ற கருத்தில்க் பின்வாங்கப் போவதில்லை.” என திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.

அதேசமயம், தீண்டாமையை ஒழிப்போம் என்ற அறைகூவலின் பொருள், தீண்டாமையை பின்பற்றுவோரை கொன்றொழிப்பது அல்ல. மாறாக, தீண்டாமை எனும் மானுட அநீதிக்கு முடிவு கட்டுவது! ஏகாதிபத்தியத்தை ஒழிப்போம் என்பதற்கு, சர்வாதிகாரிகளை கொல்வோம் என்பது பொருள் அல்ல என்று உதயநிதி ஸ்டாலினுக்கு ஆதரவான கருத்துக்களும் முன்வைக்கப்பட்டு வருகின்றன.

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios