Asianet News TamilAsianet News Tamil

சதுரங்க வேட்டை: தமிழ்நாட்டின் அடுத்த தலைமுறை அரசியல்!

தமிழ்நாடு அடுத்த தலைமுறை அரசியலை நோக்கி நகர்ந்து வருவதை அரசியல் களம் தெளிவாக சுட்டிக்காட்டுகிறது

How tamilnadu future politics will be and triangle game of annamalai udhayanidhi stalin and vijay
Author
First Published Sep 19, 2023, 11:56 AM IST

மாற்றம் ஒன்றுதான் மாறாதது என்பது போல, ஒவ்வொரு விஷயமும் காலத்திற்கு ஏற்ப மாறிக் கொண்டுதான் இருக்கும். அதற்கு அரசியலும் விதிவிலக்கல்ல. கலைஞர் கருணாநிதி, ஜெயலலிதா மறைவின்போது, தமிழகத்தில் அரசியல் வெற்றிடம் உருவானதாக சொல்லி அதனை பலரும் நிரப்ப முயன்றனர். இன்றும் நிரப்ப முயற்சித்து வருகின்றனர். அதிமுகவில் ஏராளமான பஞ்சாயத்துகள் நடந்தாலும், கட்சி தற்போது எடப்பாடி பழனிசாமி வசம் சென்றுள்ளது.

ஆனால், திமுகவில் கலைஞர் இருக்கும் போதே அவரது அரசியல் வாரிசாக ஸ்டாலின் முன்னிறுத்தப்பட்டார். வாரிசு அரசியல் என்று பெயரளவில் விமர்சனங்கள் எழுந்தாலும், அவரது அரசியல் வாழ்க்கை பலரும் அறிந்ததே என்பதால் பெரியளவில் அது எடுபடவில்லை. கலைஞர் மறைவுக்கு பிறகு, கட்சி ஒருமனதாக ஸ்டாலின் வசம் சென்றது. இருப்பினும், உதயநிதி ஸ்டாலினின் அரசியல் வருகை பெரியளவில் விமர்சனங்களை ஏற்படுத்தியது.

முதல்வர் ஸ்டாலின் போல் அல்லாமல், இளைஞரணி செயலாளர், எம்.எல்.ஏ., அமைச்சர் என மிகச் சீக்கிரமாக அவர் அடைந்த உயரங்களே கட்சிக்குள்ளும், வெளியிலும் விமர்சனங்கள் எழக் காரணமாக இருந்தது. தனது வாரிசு என்பதால் மட்டுமே உதயநிதியை மிகத் தீவிரமாக ஸ்டாலின் முன்னிறுத்துவதாக அந்த விமர்சனங்கள் எழுந்தன.

வாரிசு அரசியலை கொள்கையால் துவம்சம் செய்த உதயநிதி

ஆனால், சனாதனம் குறித்த உதயநிதி ஸ்டாலினின் சமீபத்திய பேச்சு, அவருக்கு கட்சிக்குள் பெரும் வரவேற்பை பெற்றுத் தந்துள்ளது. நாடு முழுவதும் அவரது பெயர் தினமும் பேச்சுப்பொருள் ஆனது. திராவிட இயக்கங்களில் உதயநிதி ஸ்டாலினை இதுவரை ஏற்காமல் இருந்தவர்களிடமும் அவருடைய இந்தப் பேச்சு மாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. சனாதானம் பற்றி அவர் பேசியது அவருக்காக ஏற்பாடு செய்யப்பட்ட நிகழ்ச்சியில் அல்ல. ஆனாலும், சனாதனத்தை ஒழிக்க வேண்டும் என அங்கு பேசியதுடன், தனது கருத்தில் விடாப்படியாக இருப்பது உதயநிதியின் கொள்கை பிடிப்பை காட்டுகிறது., இதுவே இத்தனை வரவேற்புக்கு காரணம். கட்சி அடிப்படையிலும் சரி, அரசு நிர்வாக அடிப்படையிலும் சரி ஸ்டாலினுக்கு அடுத்தப்படியாக உதயநிதி முன்னிறுத்தப்பட்டு விட்டார். ஸ்டாலினுக்கு அடுத்து உதயநிதிதான் என்பதில் மாற்றுக் கருத்தும் எவருக்கும் இருக்க முடியாது.

அதேபோல், உதயநிதிக்கு நேரெதிராக அரசியல் செய்பவர் பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை. பாஜக எங்கிருந்தது என்ற நிலைபோய், இன்று பாஜக அல்லாமல் தமிழ்நாட்டில் செய்தி இல்லை என்ற நிலை ஏற்பட்டுள்ளது. ஒருவேளை மத்தியில் ஆட்சியில் இல்லாவிட்டால், மீண்டும் பாஜக எங்கே என்று கேட்கும் நிலை மீண்டும் ஏற்படலாம். ஆனால், தற்போதைய நிலவரப்படி பாஜகவின் செல்வாக்கு குறிப்பாக அண்ணாமலையின் செல்வாக்கு பட்டி தொட்டியெங்கும் வளர்ந்துள்ளது. பாஜகவை தமிழ்நாட்டில் வளர்த்ததில் தமிழிசைக்கும், எல்.முருகனுக்கும் பெரும்பங்கு இருந்தாலும், கட்சியை தாண்டி தனக்கான பிராண்டை அண்ணாமலை உருவாக்கியுள்ளார்.

அண்ணாமலை உருவாக்கும் பிராண்ட்

திராவிட அரசியலுக்கு மாற்றாக ஆர்.எஸ்.எஸ். சித்தாந்தத்துடன் கூடிய பாஜக அரசியலை தமிழ்நாட்டில் அவர் முன்வைக்கிறார். அண்மையில், பேரறிஞர் அண்ணா பற்றி சர்ச்சைகுரிய கருத்தை அண்ணாமலை பேசி இருந்தார். அதற்கு அண்ணாவின் பெயரை கட்சியில் தாங்கியிருக்கும் கூட்டணி கட்சியாக அதிமுக எதிர்க்கிறது. கூட்டணி உடையும் சூழலுக்கு அவரது பேச்சு சர்ச்சையாகியுள்ளது. கூட்டணியை பொறுத்தவரை அதிமுகவுடன் பாஜக இல்லை என்று முன்னாள் அமைச்சரும், அதிமுக மூத்த தலைவருமான ஜெயக்குமார் கூறுகிறார்.

ஆனாலும், அண்ணாமலை டீம் அசரவில்லை. அதிமுகவுக்கு எதிரான கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர். அண்ணாமலையை தவிர்த்து தமிழக அரசியல் இல்லை என்ற நிலையை உருவாக்கியிருக்கிறார்கள். எப்படி மோடிக்கென ஒரு பிராண்ட் உருவானதோ, அதேபோல், தனக்கென ஒரு பிராண்டை உருவாக்கி அண்ணாமலை கிட்டத்தட்ட வெற்றியும் பெற்று விட்டார். உதயநிதி சனாதனத்தை தொட்டார். நேர் மாறாக அண்ணாமலை அண்ணாதுரையை தாக்கிப் பேசினார். இப்படி பேசினால் தான் தங்களை அரசியலில் வலுவாக நிலைநிறுத்திக் கொள்ள முடியும் என்று இவர்கள் அறிந்து வைத்து இருக்கிறார்கள். ஜெயலலிதாவைப் போன்று அதிரடியாக பேச வேண்டும் என்ற யுக்தியை கையில் எடுத்து இருப்பதாகத் தெரிகிறது.

என்னதான் அண்ணாமலை பேசினார்? அதிமுகவுடன் கூட்டணிக்கு உடைந்ததுக்கு இதுதான் காரணமா.? வெளியான தகவல்

பாஜகவிலும், திமுகவிலும் இப்படி அடுத்த தலைமுறை அரசியல்வாதிகள் பகிரங்கமாக மேடையேறி விட்ட நிலையில், அதிமுகவினர் இன்னமும் பழைய கதைகளை பேசி வருகின்றனர். எம்ஜிஆரையும், ஜெயலலிதாவையுமே அவர்கள் முன்னிறுத்தி வருகிறார்கள். அண்ணாமலைக்கோ, உதயநிதிக்கோ டஃப் கொடுக்கும் வகையில், இளம் அரசியல்வாதிகள் அதிமுக கூடாரத்தில் இல்லை. பகிரங்கமான கருத்துகளை தடாலடியாக பேச ஆள் இல்லை.

நிதர்சனத்தை புரிந்து கொள்ளுமா அதிமுக?

எம்ஜிஆர், ஜெயலலிதா போன்று வசீகரமிக்க தலைமை அதிமுகவில் இல்லை என்பதே உண்மை. அதிருப்தி திமுகதான் அதிமுக என்று சொல்வார்கள். எனவே, திமுகவுக்கு மாற்று அதிமுக, அதிமுகவுக்கு மாற்று திமுக என்றுதான் இதுவரை தமிழக அரசியல் சென்று கொண்டுள்ளது. திமுகவை சரமாரியாக எதிர்த்ததால்தான் எம்ஜிஆரையும், ஜெயலலிதாவையும் கொண்டாடினார்கள். அதே பணியை இன்று அண்ணாமலையோ, சீமானோ செய்தால் அந்த ஆதரவுக் கூட்டம் அவர்கள் பக்கம் சென்று விடும் என்ற நிதர்சனத்தை அதிமுகவினர் புரிந்து கொள்ள வேண்டும்.

தமிழ்நாட்டின் அரசியல் திமுக vs பாஜக என்று கொஞ்சம் கொஞ்சமாக சென்று கொண்டிருக்கிறது. இதைத்தான் பாஜகவினர் அன்றே சொன்னார்கள். அரசியல் விமர்சகர்களும் சுட்டிக்காட்டினர். அதுதான் இன்று நடந்து கொண்டிருக்கிறது.

அடுத்த ‘வாரிசு’ விஜய்

இந்த நிலையை ஒருவர் அமைதியாக கண்காணித்துக் கொண்டிருக்கிறார். அவரும் ஒரு ‘வாரிசு’ தான். அண்ணாமலையும், உதயநிதியும் இதுபோன்று தடாலாடியாக பேசி கொள்கை சார்ந்து தங்களது இருப்பை பலமாக தக்க வைக்க எடுக்கும் நடவடிக்கைகளுக்கு பின்னால் அவரே இருக்கிறார். சினிமாவில் வெற்றி பெற்று அரசியலிலும் ஜொலித்தவர்கள் என்றால் கலைஞர், எம்.ஜி.ஆர், ஜெயலலிதா, விஜயகாந்த் மட்டுமே. ஆனால், தோல்வியடைந்தவர்கள் பட்டியல் ஏராளம். பழம்பெரும் மறைந்த நடிகர் சிவாஜி தோல்வியைத் தழுவினார். போர் வரும்போது களத்தில் இறங்குவோம் என்று சொன்ன ரஜினி பின்வாங்கி விட்டார், அவருடன் சேர்ந்து களமாட வந்த கமல், கூட்டணியில் அங்கமாக ஆயத்தமாகிக் கொண்டிருக்கிறார். ஆனால், கலைஞர், எம்.ஜி.ஆர், ஜெயலலிதா, விஜயகாந்த் ஆகியோருக்கு இருந்த வசீகரமும் ஆளுமையும் நடிகர் விஜய்க்கு இருக்கிறது என்கிறார்கள்.

நடிகர் விஜய் அரசியலில் எடுத்தோம் குதித்தோம் என்றில்லாமல் பொறுமையாக ஆழம் பார்த்து வருகிறார். மக்கள் இயக்கம் சார்பில் தொடர்சியாக பல நலத்திட்ட உதவிகளை நடிகர் விஜய் செய்து வருகிறார். அவரது மக்கள் இயக்கம் அரசியல் இயக்கமாக மாறி வருவதால், விஜய்யின் அரசியல் வருகை குறித்து பெரிதும் விவாதிக்கப்பட்டு வருகிறது. மக்கள் இயக்கத்தினரை அரசியலுக்கு தயார் செய்யும் வகையில், உள்ளாட்சித் தேர்தல்களில் அவர்களை போட்டியிட வைத்து வெற்றியும் பெற்றுள்ளார். விஜய்யின் இந்த நடவடிக்கைகள் அவர் அரசியலுக்கு வருவதை கிட்டத்தட்ட உறுதி செய்துள்ளது. மாணவர்களுக்கு பரிசு வழங்கிய நிகழ்வில், அம்பேத்கர், பெரியார், காமராஜரை படிங்க என்று தனது கொள்கையையும் அவர் தெளிவாக கூறிவிட்டார்.

முக்கோண அரசியல்

விஜய் பேசிய அரசியல்தான் தமிழ்நாட்டின் கொள்கை நாடி என்பதால், இயல்பாகவே அவர் பக்கம் பார்வை  திரும்புவதில் ஆச்சரியமில்லை. ஆனால், முதல்வர் ஸ்டாலினை எதிர்த்து அரசியல் செய்வதில் நடிகர் விஜய்க்கு விருப்பம் இல்லை என்கிறார்கள். உதயநிதிக்கு நேரடிப் போட்டியாகவே அரசியல் களம் காண அவர் விரும்புவதாக தெரிகிறது. அம்பேத்கர், பெரியார் என தனது கொள்கைகளை மக்கள் மத்தியில் விஜய் எடுத்துச்சென்றதே, சனாதனம் குறித்து பேசி தனது திராவிட கொள்கையை உதயநிதி தீவிரமாக உயர்த்திப் பிடிக்க காரணமாக இருக்கலாம் என சுட்டிக்காட்டுகிறார்கள். இதனை புரிந்தே அண்ணாமலையும் காய்களை நகர்த்தி வருவதாக தெரிகிறது. அவரது தடாலடி பேச்சுகளும், பிராண்ட் உருவாக்கமும் இதனை அடிப்படையாக வைத்ததுதான் என்கிறார்கள்.

அனேகமாக வருகிற 2026 அல்லது அதற்கு அடுத்த தேர்தலில் விஜய் அரசியல் களம் காணலாம். அதற்குள்ளாக அடித்தளத்தையும் அவர் பலப்படுத்தியிருப்பார். அப்போது, கலைஞர்-எம்ஜிஆர், கலைஞர்-ஜெயலலிதா என்றிருந்த தமிழ்நாட்டின் அரசியல், உதயநிதி-அண்ணாமலை-விஜய் என்று அடுத்த தலைமுறைக்கு நகரக்கூடும்.

Follow Us:
Download App:
  • android
  • ios