Asianet News TamilAsianet News Tamil

கல்லூரி மாணவிகளை ஹாஸ்டல் ஓனருடன் உல்லாசமாக இருக்க அழைத்த வார்டன்... ஹோட்டலில் இருந்து தப்பித்து வந்த பெண்கள்!

hostel warden held for bid to lure girls for sexual favours
hostel warden held for bid to ‘lure girls for sexual favours
Author
First Published Jul 24, 2018, 10:16 AM IST


தனியார்  லேடிஸ் ஹாஸ்டலில்  தங்கி இருந்த கல்லூரி மாணவிகளை ஓட்டலுக்கு அழைத்துச்சென்று  சில பெரும் புள்ளிகளுக்கு படுக்கைக்கு அனுப்பும் முயற்சி நடந்து உள்ளது. இது குறித்து   வழக்குப்பதிவு செய்த போலீசார் தலைமறைவாகிவிட்ட  ஹாஸ்டல் ஓனர் மற்றும் பெண்  வார்டனை வலைவீசி தேடி வருகிறார்கள். 

கோவை சேரன்மாநகர் அருகே உள்ள வி.ஐ.பி. நகரை சேர்ந்தவர் தொழிலதிபர் ஜெகநாதன் கோவை பாலரங்கநாதபுரம் ஜீவா வீதியில் "தர்‌ஷனா" என்ற பெயரில்  லேடிஸ் ஹாஸ்டல் நடத்தி வருகிறார்.  இந்த  ஹாஸ்டலில்  கல்லூரி மாணவிகள், ஐ.டி. மற்றும் தனியார் நிறுவனங்களில் பணிபுரியும் இளம்பெண்கள் என சுமார் 180 பேர் தங்கி உள்ளனர். இந்த ஹாஸ்டலில்  கோவை தண்ணீர்பந்தல் ரோட்டை சேர்ந்த புனிதா  என்பவர் வார்டனாக இருக்கிறார்.

இந்நிலையில் நேற்று முன்தினம் மாலையில்  ஹாஸ்டல் ஓனரான தொழிலதிபர் ஜெகநாதன் பிறந்தநாள் விழா நிகழ்ச்சி ஆர்.எஸ்.புரத்தில் உள்ள ஒரு ஓட்டலில் நடப்பதாகவும், அங்கு சென்று உணவு சாப்பிட்டு விட்டு வரலாம் என்றும் விடுதியில் தங்கி இருந்த 5  பெண்களிடம் வார்டன் புனிதா கூறி உள்ளார். அதை நம்பிய அந்த பெண்கள்  புனிதாவுடன் அந்த ஓட்டலுக்கு சென்றனர்.

அங்கு சென்றதும், பெண்களுக்கு  சாப்பிட தேவையான அனைத்தையும் புனிதா வாங்கிக்கொடுத்தார். சாப்பிட்டு முடித்த பின்னர், மது அருந்துகிறீர்களா? என்று கேட்டு உள்ளார். உடனே பெண்கள் அந்த பழக்கம் எங்களுக்கு இல்லை, வேண்டாம் என்று கூறி உள்ளனர்.

அப்போது அவர், ‘‘நான் சொல்லுவதை நீங்கள் கேட்டால், உங்கள் வாழ்க்கை எங்கேயோ சென்று விடும். உங்களுக்கு  அதிகமாக  பணம் கிடைக்கும்,  அதுமட்டுமல்ல  ஹாஸ்டல் கட்டணம்  நீங்க தர வேண்டாம்.  அதேபோல  காலேஜ் கட்டணத்தையும் நாங்களே செலுத்தி விடுவோம். எனவே நான் சொல்லுவதை கேட்டு ஹாஸ்டல் ஓனருடன் மற்றும் அவரின் நண்பர்களுடன்  உல்லாசமாக இருக்க வேண்டும்’’ என்று கூறி தவறான பாதைக்கு செல்ல மாணவிகளை அழைத்ததாக தெரிகிறது.

இதனால் அதிர்ச்சி அடைந்த மாணவிகள், அதற்கு சம்மதிக்காமல், அந்த ஓட்டலில் இருந்து வெளியேறி, ஹாஸ்டலுக்கு வந்துவிட்டனர். பின்னர் அங்கு இருந்த  தோழிகளிடம் தெரிவித்தனர். இதை கேட்ட அனைவரும் அதிர்ச்சி அடைந்தனர்.

இதற்கிடையே நேற்று முன்தினம் இரவில் விடுதிக்கு வந்த வார்டன் புனிதா, அந்த மாணவிகள் 5 பேரையும் சந்தித்து இந்த சம்பவம் குறித்து வெளியே தெரிவித்தால் கொலை செய்து விடுவதாக மிரட்டல் விடுத்ததால்  மற்ற மாணவிகள் மற்றும் வேலைக்கு செல்லும் பெண்கள் தங்கள் பெற்றோருக்கு தகவல் தெரிவித்தனர். இதையடுத்து அவர்கள் நேற்று மதியம் அந்த விடுதி முன்பு திரண்டனர். இதை அறிந்த அந்த பகுதியை சேர்ந்த பொதுமக்களும் அங்கு திரண்டனர். இதனால் அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

தகவல் அறிந்த பீளமேடு  போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்றனர். பின்னர் அவர்கள் அங்கு திரண்டிருந்த பெற்றோரிடம் விசாரணை நடத்தினார்கள். அப்போது அவர்கள் இதுபோன்ற விடுதியில் எங்கள் பெண்களை  தங்க வைத்தால்  பாதுகாப்பு இல்லை. எனவே எங்கள் பெண்களை  அழைத்துச்செல்ல அனுமதிக்க வேண்டும் என்று கூறினார்கள். உடனே போலீசார் அதற்கு அனுமதித்ததால், பல மாணவிகள் நேற்று இரவு அங்கிருந்து காலி செய்து விட்டு வேறு விடுதிக்கு சென்றனர்.

மேலும் இந்த சம்பவம் குறித்து மாணவிகளின் பெற்றோர் பீளமேடு போலீசில் புகார் செய்தனர். அதன் பேரில் போலீசார் அந்த ஹாஸ்டல் ஓனர் ஜெகநாதன், வார்டன் புனிதா ஆகியோர் மீது பெண்கள் வன்கொடுமை தடுப்பு சட்டம், கொலை மிரட்டல் ஆகிய பிரிவின் கீழ் வழக்குப்பதிவு செய்து, தலைமறைவாகிய இருவரையும் வலைவீசி தேடி வருகிறார்கள்.

மேலும், தொழிலதிபர் ஜெகநாதனுக்கு தண்ணீர்பந்தல் ரோட்டில்  மற்றொரு லேடிஸ் ஹாஸ்டல் உள்ளது . அதிலும் இப்படி பெண்களை  வற்புறுத்தினார்களா என போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Follow Us:
Download App:
  • android
  • ios