Home ministry ask statement in pan masala issue

பான்பராக் மற்றும் குட்கா விற்பனை செய்ய சுகாதாரத்துறை அமைச்சர் மற்றும் உயர் போலீஸ் அதிகாரிகளுக்கு மாதா மாதம் லஞ்சம் கொடுக்கப்பட்டதாக எழுந்துள்ள புகார் குறித்து வருமான வரித்துறையிடம் மத்திய உள்துறை அமைச்சகம் அறிக்கை கேட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

சென்னை புறநகர் பகுதிகளில் உள்ள சில குட்கா நிறுவனங்களில் கடந்த ஆண்டு நடத்தப்பட்ட வருமான வரித்துறை சோதனையில், தமிழகத்தில் விற்பனைக்கு தடை செய்யப்பட்ட பான் மசாலா, குட்கா உள்ளிட்ட பொருட்களுக்கு அனுமதி அளிக்க, தமிழக சுகாதாரத் துறை அமைச்சர் மற்றும் காவல்துறை அதிகாரிகளுக்கு மாதா மாதம் லஞ்சம் கொடுக்கப்பட்டதாக ஆவணங்கள் கிடைத்ததாக தகவல்கள் வெளியாகின.

இந்த நிலையில், அமைச்சர் விஜயபாஸ்கர் லஞ்சம் வாங்கியதாக எழுந்த புகார் மீது தமிழக சட்டப்பேரவையில் விவாதம் நடத்த திமுக அனுமதி கோரியது. ஆனால், அனுமதி மறுக்கப்பட்டதால், சபையில் இருந்து இருந்து திமுக வெளிநடப்பு செய்தது.

இந்நிலையில் இந்த விவகாரம் குறித்து மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் ஜெ.பி நட்டா டெல்லியில் சுகாதாரத்துறை உயர் அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார்.

இதனிடையே மத்திய உள்துறை அமைச்சக அதிகாரிகளின் கூட்டம் டெல்லியில் நேற்று நடைபெற்றது. இதில் குட்கா விவகாரம் குறித்து விவாதிக்கப்பட்டதாக தெரிகிறது.

இதையடுத்து வருமான வரித்துறையினர் நடத்திய சோதனையின்போது கைப்பற்றப்பட்ட ஆவணங்கள், அமைச்சர் மற்றும் உயர் போலீஸ் அதிகாரிகளுக்கு வழங்கப்பட்டதாக கூறப்படும் லஞ்ச விவகாரம் போன்றவை குறித்து விரிவான அறிக்கை தயாரித்து அனுப்ப கேட்டுக் கொள்வது என அந்த கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டுள்ளதாக தெரிகிறது.

இதையடுத்து குட்கா. பான்மசாலா விவகாரத்தில் வருமான வரித்துறை அறிக்கையை மத்திய உள்துறை அமைச்சகம் கேட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது