ஹிட்டாச்சி குழுமம் தமிழ்நாடு அரசு இடையே ₹2,000 கோடி முதலீடு செய்வதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தானது. இந்தத் திட்டத்தின் மூலம் அடுத்த 5 ஆண்டுகளில் 3,000 புதிய வேலைவாய்ப்புகள் உருவாக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
ஜப்பான் நாட்டைச் சேர்ந்த உலகப் புகழ்பெற்ற ஹிட்டாச்சி குழுமம், தமிழ்நாட்டில் தனது தொழில்நுட்ப மற்றும் புத்தாக்க மையத்தை விரிவாக்கம் செய்வதற்காக ₹2,000 கோடி முதலீடு செய்யும் புரிந்துணர்வு ஒப்பந்தத்தை, முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் முன்னிலையில் இன்று (அக்டோபர் 15) கையெழுத்திட்டது.
ரூ.2,000 கோடி முதலீடு
உலகளாவிய பார்ச்சூன் 500 நிறுவனங்களில் ஒன்றான ஹிட்டாச்சி குழுமத்தின் துணை நிறுவனமான ஹிட்டாச்சி எனர்ஜி டெக்னாலஜி சர்வீசஸ் (Hitachi Energy Technology Services) நிறுவனத்தின் உலகளாவிய தொழில்நுட்ப மற்றும் புத்தாக்க மையம், கடந்த 2023 ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் சென்னை போரூரில் முதலமைச்சரால் தொடங்கி வைக்கப்பட்டது.
அதன் தொடர்ச்சியாக, இன்று சென்னை தலைமைச் செயலகத்தில் நடைபெற்ற நிகழ்வில், ஹிட்டாச்சி எனர்ஜி டெக்னாலஜி சர்வீசஸ் நிறுவனத்தின் விரிவாக்கத் திட்டத்திற்கான புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தானது.
3000 பேருக்கு வேலைவாய்ப்பு
இந்த ஒப்பந்தத்தின்படி, அடுத்த 5 ஆண்டுகளில், ஹிட்டாச்சி நிறுவனம் ₹2,000 கோடி ரூபாய் முதலீடு செய்ய உள்ளதுடன், 3,000 நபர்களுக்குப் புதிய வேலைவாய்ப்புகளை உருவாக்கவும் உறுதியளித்துள்ளது.
முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் முன்னிலையில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில், தொழில், முதலீட்டு ஊக்குவிப்பு மற்றும் வர்த்தகத்துறை அமைச்சர் டி.ஆர்.பி. ராஜா, தலைமைச் செயலாளர் நா. முருகானந்தம், தொழில் துறை செயலாளர் வி. அருண் ராய், ஹிட்டாச்சி நிறுவனத்தின் உலகளாவிய தலைமைச் செயல் அலுவலர் ஆண்ட்ரியாஸ் ஷீரன்பெக், ஹிட்டாச்சி இந்தியா நிறுவனத்தின் மேலாண்மை இயக்குநர் வேணு நுகரி மற்றும் அந்நிறுவனத்தின் உயர் அலுவலர்கள், அரசு உயர் அலுவலர்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்.
இந்த புதிய முதலீட்டின் மூலம் தமிழ்நாட்டின் தொழில்நுட்பத் துறையும், வேலைவாய்ப்புகளும் மேலும் வளர்ச்சி அடையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
