மீண்டும் போலீஸ் பாதுகாப்பு வேண்டும் என்பதற்காக தன் கார் மீதே பெட்ரோல் குண்டு வீசிய இந்து மக்கள் கட்சியைச் சேர்ந்த 3 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

திருவள்ளூர் மாவட்டம், மீஞ்சூர் புங்கமேடு பகுதியைச் சேர்ந்தவர் காளி குமார். திருவள்ளூர் மாவட்ட இளைஞரணி செயலாளராக பதவி வகித்து வந்தார். 2016 ஆம் ஆண்டு முதல் இந்து மக்கள் கட்சியில் இருந்து வருகிறார். 

இந்த நிலையில் காளி குமார் மீது மர்ம நபர்கள் சிலர் தாக்குதல் நடத்தி உள்ளனர். இதனைத் தொடர்ந்து அவருக்கு ஆயுதம் ஏந்திய போலீசார் பாதுகாப்பு அளித்திருந்தனர்.

பாதுகாப்பு பணியில் இருந்த போலீசாரை, காளிகுமார் ஆபாசமாக திட்டியதாக கூறப்படுகிறது. இதனைத் தொடர்ந்து காளிகுமாருக்கு வழங்கப்பட்ட பாதுகாப்பு திரும்பப் பெறப்பட்டது.

மீண்டும் தனக்கு பாதுகாப்பு வேண்டும் என்று கருதிய காளி குமார், தன் கார் மீது பெட்ரோல் குண்டு வீச செய்திருக்கிறார். இதனால் மீண்டும் பாதுகாப்பு கிடைக்கும் அல்லவா. அதனால், தனது அண்ணன் மகன் மூலமே பெட்ரோல் குண்டை வீசச் செய்துள்ளார் காளி குமார். மீண்டும் தன்மீது மர்ம நபர்கள் தாக்குதல் நடத்துகின்றனர் என்று கூறி காளிகுமார் நாடகமாடியுள்ளார்.

காளிகுமாரின் கார் மீது பெட்ரோல் குண்டு வீசப்பட்டது குறித்து எஸ்.பி. சிபி சக்கரவர்த்தி விசாரணை நடத்தினார். விசாரணையில் காளி குமார், தனது அண்ணன் மகன் ரஞ்சித் மூலம் தன் கார் மீது பெட்ரோல் குண்டு வீசியதை ஒப்புக் கொண்டார்.

இதையடுத்து, காளிகுமார், ஞானசேகரன், ரஞ்சித் ஆகியோர் மீது சோழவரம் போலீசார் வழக்கு பதிவு செய்து கைது செய்துள்ளனர். அவர்களிடம் போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.