ஆற்காட்டில் இந்து முன்னணி நிர்வாகி மீது, பெட்ரோல் குண்டு வீசப்பட்டது. அதிர்ஷ்டவசமாக அவர் உயிர் தப்பினார். இச்சம்பவம் அப்பகுதியில் பரபரப்பையும், பதற்றத்தையும் ஏற்படுத்தியுள்ளது. இதனால், அந்த பகுதியில் போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.
வேலூர் மாவட்டம், ஆற்காடு ராஜா கோரி தெருவை சேர்ந்தவர் இளங்கோ (36), ஆற்காடு நகர இந்து முன்னணி அமைப்பின் தலைவர். இளங்கோ சினிமா தியேட்டர்களில் உள்ள கேன்டீன்களுக்கு உணவு பொருட்கள் சப்ளை செய்யும் தொழில் செய்து வருகிறார். இவரது மனைவி பூர்ணிமா (27). இவர்களுக்கு ஜெயஸ்ரீ (2) என்ற மகள் உள்ளார்.
நேற்று முன்தினம் இளங்கோ தனது மனைவி, மகளை குடியாத்தத்தில் உள்ள உறவினர் வீட்டுக்கு அழைத்து சென்றார். அவர்களை அங்கேயே விட்டு விட்டு ஆற்காட்டுக்கு சென்றார். அங்கு தனது வேலைகளை கவனித்தார்.
பின்னர் வெளியே சென்றுவிட்டு நள்ளிரவில் பைக்கில் தனது வீட்டுக்கு வந்தார். அப்போது வீட்டின் அருகே இருந்த 2 மர்மநபர்கள், பிளாஸ்டிக் கவரில் பெட்ரோல் நிரப்பப்பட்ட பெட்ரோல் குண்டை இளங்கோ மீது வீசினர். இதே போல் எதிர் திசையில் இருந்தும் மற்றொரு பெட்ரோல் குண்டு வீசப்பட்டது.
தன் மீது பெட்ரோல் குண்டு வீசப்படுவதை பார்த்த இளங்கோ அங்கிருந்து தப்பி ஓடினார். அப்போது மற்றொரு பெட்ரோல் குண்டும் வீசப்பட்டு அது இளங்கோ மீது படாமல் கீழே விழுந்தது. இதனையடுத்து மர்ம நபர்கள் அங்கிருந்து தப்பி ஓடிவிட்டனர்.
இதுகுறித்து ஆற்காடு டவுன் போலீசில், இளங்கோ புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து பார்வையிட்டு விசாரணை நடத்தினர். மேலும் போலீசார் வழக்குப்பதிவு செய்து, தப்பியோடிய மர்மநபர்களை வலைவீசி தேடி வருகின்றனர்.
இந்த சம்பவத்தை தொடர்ந்து இளங்கோவின் வீடு உள்ள பகுதியிலும், நகரில் முக்கிய பகுதிகளிலும் போலீசார் குவிக்கப்பட்டு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
