கல்லூரி மாணவிகளுக்கு ரூ.1000 உதவித்தொகை திட்டம்... வழிமுறைகளை வெளியிட்டது உயர்கல்வித்துறை!!
உயர்கல்வி படிக்கும் மாணவிகளுக்கு ரூ.1000 உதவித் தொகை வழங்கும் மூவலூர் ராமாமிர்தம் அம்மையார் உதவித்தொகை திட்டத்திற்கான வழிமுறைகளை உயர் கல்வித்துறை வெளியிட்டுள்ளது.
உயர்கல்வி படிக்கும் மாணவிகளுக்கு ரூ.1000 உதவித் தொகை வழங்கும் மூவலூர் ராமாமிர்தம் அம்மையார் உதவித்தொகை திட்டத்திற்கான வழிமுறைகளை உயர் கல்வித்துறை வெளியிட்டுள்ளது. தமிழக முதல்வர் சட்டமன்றத்தில், மூவலூர் ராமாமிர்தம் அம்மையார் நினைவு திருமண நிதியுதவி திட்டம், உயர்கல்வி உறுதி திட்டமாக மாற்றப்பட்டதாக அறிவித்தார். அதைத்தொடர்ந்து பல்வேறு சலுகைகள் அறிவிக்கப்பட்டது. அதன்படி, 6-ம் வகுப்பு முதல் பிளஸ் 2 வரை அரசுப் பள்ளிகளில் படித்த மாணவிகள், கல்லூரி, பாலிடெக்னிக் அல்லது ஐடிஐயில் சேர்ந்து படிக்கும்போது அவர்களுக்கு உயர்கல்வி உறுதி திட்டத்தின் கீழ் மாதந்தோறும் ரூ.1,000 வழங்கப்படும் என்று தமிழக அரசு அறிவித்திருந்தது. தற்போது இந்த திட்டத்தை அமல்படுத்த தமிழகஅரசு முயற்சி எடுத்துள்ளது. ஜூலை 15 ஆம் தேதி முதல் அமல்படுத்தப்பட இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதற்காக அரசுப் பள்ளியில் படித்து கல்லூரிகளில் தற்போது உயர்கல்வியை தொடரும் மாணவிகளின் விவரங்கள் அந்தந்த கல்லூரி நிர்வாகங்கள் மூலம் சேகரிக்க உத்தரவிடப்பட்டு உள்ளது. ரூ.1,000 கல்வி உதவித்தொகை வழங்கும் திட்டத்தில் தகுதியான மாணவிகளிடம் சான்றிதழை பெற அனைத்து கல்லூரி முதல்வர்களுக்கும் உயர்கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது. இந்த நிலையில் உயர்கல்வி படிக்கும் மாணவிகளுக்கு ஆயிரம் ரூபாய் உதவித்தொகை வழங்கும் மூவலூர் ராமாமிர்தம் அம்மையார் உதவித்தொகை திட்டத்திற்கான வழிமுறைகளை உயர் கல்வித்துறை வெளியிட்டுள்ளது.
இதுதொடர்பாக உயர்கல்வித்துறை கல்லூரிகளுக்கு அனுப்பியுள்ள சுற்றறிக்கையில், அரசுப் பள்ளிகளில் 6 முதல் 12 ஆம் வகுப்பு வரை பயின்ற மாணவிகள் உயர்க்கல்வி திட்டத்தில் பயன்பெறுவர். கல்லூரி வாயிலாகவோ அல்லது www.penkalvi.tn.gov.in என்ற இணையதளத்தின் மூலமாகவோ மாணவிகள் நேரடியாக பதிவு செய்யலாம். கலை, அறிவியல் கல்லூரிகளில் சேரும் மாணவிகளுக்கு மாதம் ரூ.1,000 வழங்க பெயரை பதிவு செய்ய சிறப்பு முகாம் அமைக்கப்பட வேண்டும். நாளை முதல் ஜூன் 30 ஆம் தேதி வரை சிறப்பு முகாம்கள் நடத்தி தகுதியான மாணவிகளின் பெயர்களை பதிவு செய்ய வேண்டும். மாணவிகளின் ஆதார், வங்கி கணக்கு புத்தகம், கல்வி சான்றிதழ்களை விண்ணப்பத்துடன் பதிவேற்ற வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.