சத்தியமங்கலம் புலிகள் சரணாலய நெடுஞ்சாலையில் மாலை 6 மணி முதல் காலை 6 மணி வரை வாகன போக்குவரத்துக்கு விதிக்கப்பட்ட தடையை அமல்படுத்த வனத்துறைக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. 

சத்தியமங்கலம் புலிகள் சரணாலய நெடுஞ்சாலையில் மாலை 6 மணி முதல் காலை 6 மணி வரை வாகன போக்குவரத்துக்கு விதிக்கப்பட்ட தடையை அமல்படுத்த வனத்துறைக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. வழக்கறிஞர் சொக்கலிங்கம் என்பவர் தாக்கல் செய்த மனுவில், சத்தியமங்கலம் புலிகள் சரணாலயத்தின் வழியே செல்லும் தேசிய நெடுஞ்சாலைகளில் வாகனங்களால் மோதப்பட்டு ஏராளமான வன விலங்குகள் பலியாவதாக குறிப்பிடப்பட்டிருந்தது.

2012 முதல் 2021 ஆம் ஆண்டு வரை 155 விலங்குகள் உயிரிழந்து இருப்பதாகவும், விலங்குகளை காக்கும் வகையில் இரவு நேரத்தில் போக்குவரத்துக்கு தடை விதிக்க உத்தரவிட வேண்டும் என்றும் கோரிக்கை வைக்கப்பட்டது. இவ்வழக்கு பொறுப்பு தலைமை நீதிபதி முனீஸ்வர்நாத் பண்டாரி, நீதிபதி பாரத சக்கரவர்த்தி அமர்வில் விசாரணைக்கு வந்த போது, சரணாலய நெடுஞ்சாலையில் இரவு நேர வாகன போக்குவரத்துக்கு தடை விதித்து 2019 ஆம் ஆண்டு ஈரோடு ஆட்சியர் உத்தரவு பிறப்பித்துள்ளதாகவும், மக்கள் எதிர்ப்பு காரணமாக அதனை அமல்படுத்தவில்லை என்றும் வனத்துறை தெரிவித்தது.

இதனை ஏற்க மறுத்த நீதிபதிகள், மக்கள் ஏற்றுக்கொள்ளவில்லை என்றாலும் உத்தரவை அமல்படுத்த வேண்டும் என்றும் அதனை மீறுவோரின் பெயர் பட்டியலை அளிக்கவும் உத்தரவிட்டனர். விலங்குகளின் உயிரிழப்புக்கு வனத்துறை அதிகாரிகளை ஏன் பொறுப்பாக்கக்கூடாது? என்றும் நீதிபதிகள் கேள்வி எழுப்பினர். சத்தியமங்கலம் புலிகள் சரணாலயத்தின் வழியாக செல்லும் தேசிய நெடுஞ்சாலையில் மாலை 6 மணி முதல் மறுநாள் காலை 6 மணி வரை வாகன போக்குவரத்துக்கு விதிக்கப்பட்ட தடை உத்தரவை வரும் 10ம் தேதி முதல் அமல்படுத்த உத்தரவிட்ட நீதிபதிகள், ஆட்சியர் உத்தரவை இதுவரை அமல்படுத்தாதது குறித்து விளக்கம் அளிக்கவும் வனத்துறைக்கு உத்தரவிட்டு விசாரணையை பிப்ரவரி 15 ஆம் தேதிக்கு தள்ளிவைத்துள்ளனர்.