வீடுகள் அல்லது சென்டர்களில் தனியாக டியூஷன் எடுக்கும் அரசு ஆசிரியர்கள் மீது துறை ரீதியான ஒழுங்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் என உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவு பிறப்பித்துள்ளது.
வீடுகள் அல்லது சென்டர்களில் தனியாக டியூஷன் எடுக்கும் அரசு ஆசிரியர்கள் மீது துறை ரீதியான ஒழுங்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் என உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவு பிறப்பித்துள்ளது. தஞ்சாவூரைச் சேர்ந்த ஆசிரியர் ராதா என்பவர் உயர்நீதிமன்ற மதுரை கிளையில் மனு ஒன்றை தாக்கல் செய்திருந்தர். அந்த மனு மீதான விசாரண நீதிபதி எஸ்.எம்.சுப்பிரமணியம் முன்னிலையில் இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதி பல்வேறு முக்கிய உத்தரவுகளை பிறப்பித்தார். அதன்படி, அரசு பள்ளி ஆசிரியர்களின் மீதான குற்றச்சாட்டுகள் மற்ரும் புகார்களை தெரிவிக்க தொலைபேசி மற்றும் வாட்ஸ்அப் எண் போன்றவற்றை உருவாக்கி விளம்பரப்படுத்த வேண்டும் என்றும் நீதிபதி கூறினார்.


மேலும் அரசுப் பள்ளி ஆசிரியர்கள் மீதான குற்றச்சாட்டுகள் தொடர்பாக ஆய்வுகள், தகவல்கள், புகார்கள், ஆதாரங்கள் போன்றவற்றைச் சேகரிக்க, பள்ளி கல்வி ஒவ்வொரு மாவட்டத்திற்கும் சிறப்புக் குழுக்களை 4 வாரங்களில் அமைக்க வேண்டும் என்று துறை முதன்மை செயலாளர்களுக்கு உத்தரவிட்டார். மேலும், அரசு ஆசிரியர்களாக பணியில் இருந்து கொண்டே, தொழிலில் ஈடுபடுவது, பிற இடங்களில் பகுதி நேர வேலை பார்ப்பது, டியூஷன் சென்டர்களை நடத்துவது, பயிற்சி மையங்களை நடத்துவது ஏற்றுக்கொள்ள கூடியது இல்லை என்று கூறிய நீதிமன்றம், அவ்வாறு டியூஷன் சென்டர் நடத்தும் அரசு ஆசிரியர்கள் துறை ரீதியான மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் உத்தரவு பிறப்பித்துள்ளது.

பிற அரசு அலுவலர்களுடன் ஒப்பிடுகையில், அரசு பள்ளி ஆசிரியர்களின் வேலை நாள் மற்றும் நேரம் குறைவானது என்றும், டியூஷன் எடுப்பது ஆசிரியர்கள் மத்தியில் புற்றுநோய் போல் பரவிக் கிடக்கிறது. இது பணம் சம்பாதிக்க வேண்டும் என்கிற பேராசையை அதிகரித்திருக்கிறது என்றும் நீதிபதி கருத்து தெரிவித்தார். மேலும், மேற்கண்ட உத்தரவுகளை 4 வாரங்களில் செயல்படுத்த வேண்டும் என்றும், அதன் அறிக்கையை பள்ளி கல்வி துறை முதன்மை செயலாளர் தாக்கல் செய்ய வேண்டும் என்றும் உத்தரவிட்ட நீதிபதி, வழக்கு விசாரணையை ஏப்ரல் 4ஆம் தேதிக்கு ஒத்தி வைத்தார்.
