தமிழகம் முழுவதும் டாஸ்மாக் மற்றும் பார்களை மூட வேண்டும் என்ற தனிநீதிபதியின் உத்தாரவுக்கு சென்னை உயர்நீதிமன்ற முதன்மை அமர்வு தடை விதித்துள்ளது. 

தமிழகம் முழுவதும் டாஸ்மாக் மற்றும் பார்களை மூட வேண்டும் என்ற தனிநீதிபதியின் உத்தாரவுக்கு சென்னை உயர்நீதிமன்ற முதன்மை அமர்வு தடை விதித்துள்ளது. தமிழகம் முழுவதும் டாஸ்மாக் சில்லறை மதுபான கடைகளில் இணைப்பில் இருக்க கூடிய பார்கள், தின்பண்டம் விற்பனை மற்றும் காலிப்பாட்டில்களை சேகரிப்பதற்கு புது டெண்டர் அறிவிப்பை டாஸ்மாக் நிர்வாகம் ஏற்கனவே அறிவித்திருந்தது. இந்த நிலையில் கொரோனா ஊரடங்கால் பார்கள் மூடப்பட்டது. இதனால் புதிய டெண்டருக்கு பதிலாக பழைய டெண்டரை நீட்டிக்க வேண்டும் என்றும் நில தடையில்லா சான்றை கட்டாயப்படுத்தக் கூடாது போன்ற கோரிக்கைகளை வலியுறுத்தி சில ஒப்பந்ததாரர்கள் வழக்கு தொடர்ந்திருந்தனர்.

இந்த மனுவை விசாரித்த நீதிபதிகள் அனைத்து வழக்குகளையும் தள்ளுபடி செய்து உத்தரவிட்டனர். ஆனால் அதே சமயம் தமிழகம் முழுவதும் இருக்கக் கூடிய அனைத்து டாஸ்மாக் பார்களையும் 6 மாதத்திற்குள் மூட வேண்டும் என்றும் கெடு விதிக்கப்பட்டது. இதனால் டாஸ்மாக் நிறுவனம் அதிர்ச்சி அடைந்தது. இதனையடுத்து தனி நீதிபதியின் உத்தரவை எதிர்த்து டாஸ்மாக் நிறுவனம் உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு மனுத்தாக்கல் செய்தது. இந்த வழக்கு இன்று உயர்நீதிமன்ற தலைமை நீதிபதிகள் அமர்வில் விசாரணைக்கு வந்தது.

அப்போது டாஸ்மாக் தரப்பில் ஆஜரான அரசின் தலைமை வழக்கறிஞர் சண்முகசுந்தரம், இந்த வழக்கில் வழக்கிற்கு அப்பாற்பட்டு தனி நீதிபதி இந்த உத்தரவை பிறப்பித்துள்ளதாகவும், வழக்கு தொடர்ந்த மனுதாரர் யாரும் டாஸ்மாக் பார்களை மூட வேண்டும் என்று கேட்கவில்லை என்றும் வாதங்களை முன்வைத்தார். மேலும், தனி நீதிபதி உத்தரவுக்கு தடை விதிக்க வேண்டும், அதேபோல டாஸ்மாக் நிறுவனத்துக்கு பார்களை நடத்துவதற்கான உரிமை உள்ளது என்று கூறி வாதிட்டார். இதனை ஏற்றுக் கொண்ட முதன்மை அமர்வு அந்த தனி நீதிபதியின் உத்தரவுக்கு தடை விதித்து உத்தரவிட்டது. மேலும் டாஸ்மாக் நிர்வாகம், பார்கள் நடத்துவதற்கான டெண்டர்களை வெளியிடலாம் என்றும் உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. டாஸ்மாக் பார்கள் அனைத்தையும் மூட சொன்ன தனி நீதிபதியின் தீர்ப்புக்கு உயர்நீதிமன்றம் தடை விதித்ததை அடுத்து டாஸ்மாக் நிறுவனம் தொடர்ந்து செயல்படும் என தெரியவருகிறது.