high court withdraw farmers loan
தமிழகத்தில் கடந்த ஆண்டு மழை பொய்த்தால், விவசாயம் கடுமையாக பாதித்தது. இதனால், கடும் வறட்சி ஏற்பட்டு 250க்கு மேற்பட்ட விவசாயிகள் தற்கொலை செய்து கொண்டனர். பலர் மாரடைப்பால் இறந்துள்ளனர்.
மேலும், விவசாயத்துக்காக பல்வேறு கூட்டுறவு வங்கிகளில், விவசாயிகள் கடன் வாங்கினர். வறட்சி பாதிப்பால், விவசாயம் செய்ய முடியாமல் நஷ்டம் ஏற்பட்டது. இதனால், கூட்டுறவு வங்கிகளில் வாங்கிய கடன்களை திரும்ப கட்டமுடியாமல் கடும் அவதியடைந்தனர்.
இதுதொடர்பாக தமிழ்நாடு விவசாயிகள் சங்க தலைவர் அய்யாக்கண்ணு, தற்போது டெல்லி ஜந்தர் மந்தர் மைதானத்தில் 21வது நாளாக போராட்டம் நடத்தி வருகிறார்.

முன்னதாக மதுரை கிளை உயர்நீதிமன்றத்தில், அய்யாக்கண்ணு, கூட்டுறவு சங்கங்களில், விவசாயிகள் பெற்ற கடன்களை தள்ளுபடி செய்ய வேண்டும் என வழக்கு தொடர்ந்தார்.
இந்த வழக்கினை சென்னை உயர்நீதிமன்றம் தானாக முன் வந்து எடுத்து கொண்டது. இதை தொடர்ந்து, இன்று இந்த வழக்கு சென்னை உயர்நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது.
நீதிபதிகள் நாகமுத்து, முரளிதரன் ஆகியோர் அடங்கிய பெஞ்ச் விசாரித்தது. பின்னர் நீதிபதிகள், விவசாயிகள் பெற்ற கடன்களை கூட்டுறவு சங்க வங்கிகள், ரத்து செய்ய வேண்டும் என உத்தரவிட்டனர்.

விவசாயிகளுக்காக கடந்த 21 நாட்களாக போராட்டம் நடத்தி வரும் அய்யாக்கண்ணுவுக்கு கிடைத்த முதல் வெற்றி என கூறுகின்றனர்.
இதுகுறித்து அய்யாக்கண்ணு கூறுகையில், உயர்நீதிமன்ற உத்தரவால் கூட்டுறவு வங்கிகளில் விவசாயிகள் பெற்ற வங்கி கடன்கள் தள்ளுபடி செய்யப்படுகிறது. இதன் மூலம் 4 லட்சம் விவசாயிகள் பயன் அடைவார்கள்.
இதேபோல், தேசியமயமாக்கப்பட்ட வங்கிகளிலும் நகை மற்றும் விவசாயத்துக்கு பெற்ற கடனை ரத்து செய்ய வேண்டும். அதற்கு மத்திய அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். அதுவரை டெல்லியில் போராட்டம் தொடரும்.
இவ்வாறு அவர் கூறினார்.
