Asianet News TamilAsianet News Tamil

கோவில் பூசாரியாக 7 வயது சிறுவன்.. குடும்பத்தை விட்டு கோவிலில் வாழும் சிறுவன்.. நீதிமன்றத்தில் வழக்கு..

நீலகிரி மாவட்டத்தில் கோவில் பூசாரியாக இருக்கும் சிறுவனுக்குத் தடையில்லாத கல்வி கிடைப்பதற்கு அரசு நடவடிக்கை எடுக்க வேண்டுமெனவும் சிறுவனின் உரிமைகள் மீறப்பட்டால் குழந்தைகள் உரிமைகள் பாதுகாப்பு ஆணையத்தில் புகார் கொடுக்கலாம் எனவும் சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
 

High Court Order
Author
Chennai, First Published Dec 24, 2021, 3:22 PM IST

நீலகிரி மாவட்டத்தில் கோவில் பூசாரியாக இருக்கும் சிறுவனுக்குத் தடையில்லாத கல்வி கிடைப்பதற்கு அரசு நடவடிக்கை எடுக்க வேண்டுமெனவும் சிறுவனின் உரிமைகள் மீறப்பட்டால் குழந்தைகள் உரிமைகள் பாதுகாப்பு ஆணையத்தில் புகார் கொடுக்கலாம் எனவும் சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

இது தொடர்பாக, சிவன் என்பவர் தாக்கல் செய்த மனுவில், நீலகிரி மாவட்டத்தில் உள்ள படுகர் இன மக்களின் குலதெய்வமான கெத்தை அம்மன் கோயில், 1994ஆம் ஆண்டு முதல் இந்து சமய அறநிலையத்துறையின் கட்டுப்பாட்டின் கீழ் கொண்டு வரப்பட்டதாகவும், அங்கு இரண்டாம் வகுப்பு படிக்கும் 7 வயதுச் சிறுவன் பூசாரியாக நியமிக்கப்பட்டுள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

இதுபோல பூசாரியாக நியமிக்கப்படும் சிறுவர்களால் பள்ளி செல்ல முடியாது என்றும், உணவை அவர்களே சமைத்துச் சாப்பிடுவது, கோயில் பசுக்களின் பாலைக் கறந்து நெய் எடுத்து விளக்குகளுக்குப் பயன்படுத்துவது போன்றவற்றால் கல்வி தடைப்படுகிறது என்றும், இது கட்டாயக் கல்வி உரிமைச் சட்டத்திற்கு எதிரானது என்றும் குறிப்பிட்டுள்ளார்.

இந்த வழக்கு பொறுப்பு தலைமை நீதிபதி முனீஷ்வர் நாத் பண்டாரி, நீதிபதி பி.டி.ஆதிகேசவலு ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. இந்த வழக்கில் மனுதாரர் தரப்பு வழக்கறிஞர், சிறுவன் மற்றும் பெற்றோர் தரப்பு வழக்கறிஞர், அரசுத் தரப்பில் தலைமை வழக்கறிஞர் சண்முகசுந்தரம், அரசு பிளீடர், அரசு சிறப்பு வழக்கறிஞர் மற்றும் அறநிலையத்துறை தரப்பில் அரசு சிறப்பு வழக்கறிஞர் உள்ளிட்டோர் ஆஜராகினர்.

அப்போது, தமிழக அரசுத் தரப்பில் கோயில் மரபுப்படி சிறுவன் கோயிலை விட்டு வெளியில் வரக் கூடாது என்றும், தமிழகத்தில் வீடுதோறும் கல்வி திட்டம் மூலம் தற்போது மூன்றாம் வகுப்பு படிப்பதாகவும், மாணவர்களுக்கு வழங்கப்படும் இ.எம்.ஐ.எஸ். எண் உருவாக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டது. சிறுவனுக்குத் தடையற்ற கல்வி கிடைக்க வேண்டுமென்ற மனுதாரர் கோரிக்கை நிறைவேற்றப்பட்டு உள்ளதாகவும் குறிப்பிடப்பட்டது.

அரசு விளக்கத்தை ஏற்றுக்கொண்ட நீதிபதிகள், சிறுவனுக்குத் தொடர்ந்து கல்வி கிடைப்பதற்கான வாய்ப்புகளை அரசு ஏற்படுத்திக் கொடுக்க உத்தரவிட்டு வழக்கை முடித்து வைத்தனர். சிறுவனின் உரிமைகள் மீறப்படுவதாகத் தெரிந்தால் குழந்தைகள் உரிமைகள் பாதுகாப்பு ஆணையத்தை மனுதாரர் அணுகலாம் என்றும் உத்தரவிட்டுள்ளனர்.

Follow Us:
Download App:
  • android
  • ios