high court maudrai branch interim ban to solvathellam unmai

ஜீ தமிழ் தொலைக்காட்சியில் சொல்வதெல்லாம் உண்மை என்ற நிகழ்ச்சி ஒளிபரப்பப்பட்டு வருகிறது. நடிகையும் இயக்குநருமான லட்சுமி ராமகிருஷ்ணன் இந்த நிகழ்ச்சியை தொகுத்து வழங்கி வருகிறார்.

இந்த நிகழ்ச்சி தொடர்பான பல்வேறு விமர்சனங்கள் பரவலாக உள்ளன. எனினும் இந்த நிகழ்ச்சி தொடர்ந்து ஒளிபரப்பப்பட்டு வந்தது. குடும்ப பிரச்னைகளுக்கும் தீர்வு காண்பதாக இந்த நிகழ்ச்சி நடத்தப்பட்டு வருகிறது. ஆனால் குடும்ப பிரச்னைகளை தீர்த்து வைப்பதற்கு குடும்ப நல நீதிமன்றங்கள் உள்ள நிலையில், இதுபோன்ற நிகழ்ச்சிகள் கூடாது என்ற எதிர்ப்பு இருந்தது. 

மேலும் குடும்ப விஷயங்களை தொலைக்காட்சியில் ஒளிபரப்புவது தனி மனித சுதந்திரத்திற்கு எதிரானது என்ற கருத்தும் பரவலாக இருந்தது. பல்வேறு விமர்சனங்கள் இருந்தபோதும், இந்த நிகழ்ச்சி தொடர்ந்து ஒளிபரப்பப்பட்டது. 

விருதுநகரை சேர்ந்த கல்யாணசுந்தரம் என்பவர், இந்த நிகழ்ச்சி தனிமனித உரிமையில் தலையிடும் வகையில் உள்ளதாக கூறி உயர்நீதிமன்ற மதுரை கிளையில் வழக்கு தொடர்ந்திருந்தார்.

அந்த வழக்கை விசாரித்த உயர்நீதிமன்ற மதுரை கிளை, சொல்வதெல்லாம் உண்மை நிகழ்ச்சியை ஒளிபரப்ப இடைக்கால தடை விதித்து உத்தரவிட்டுள்ளது.