நீட் தேர்வுக்கு எதிராக உதயநிதியின் கையெழுத்து இயக்கம்... வழக்கு போட்டவருக்கு ஷாக் கொடுத்த உயர்நீதிமன்றம்
கையெழுத்து இயக்கத்தால் மனுதாரர் எப்படி பாதிக்கப்படுகிறார்? என கேள்வி எழுப்பிய நீதிபதி, நீட் தேர்வு விஷயத்தில் மத்திய அரசு ஏதேனும் முடிவெடுத்து, அது மாணவர்கள் நலனுக்கு விரோதமாக அமைந்தால் வழக்கு தொடரலாம் என தெரிவித்து வழக்கை முடித்து வைத்தது.

நீட் தேர்வுக்கு எதிராக தொடரும் போராட்டம்
நீட் தேர்வு அச்சத்தின் காரணமாக மாணவ, மாணவிகள் தற்கொலை நிகழ்வுகள் தொடர்ந்து கொண்டிருப்பதால், நீட் தேர்வுக்கு எதிராக தமிழகத்தில் தொடர்ந்து போராட்டங்கள் நடைபெற்று வருகிறது. தமிழக சட்டப்பேரவையில் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டு ஆளுநருக்கும் அனுப்பிவைக்கப்பட்டது. ஆனால் மத்திய அரசு நீட் விவகாரத்தில் எந்த வித உறுதியான முடிவும் எடுக்கவில்லை.
இதன் அடுத்த கட்டமாக 50 லட்சம் பேரிடம் கையெழுத்து வாங்கும் வகையில் நீட் தேர்வுக்கு எதிராக கையெழுத்து இயக்கத்தை அமைச்சர் உதயநிதி தொடங்கியுள்ளார். பள்ளி மாணவர்களிடமும் கையெழுத்து வாங்கப்பட்டு வருகிறது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து தேசிய மக்கள் சக்தி கட்சித் தலைவர் வழக்கறிஞர் எம்.எல்.ரவி சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு ஒன்றை தாக்கல் செய்தார்.
பள்ளிகளில் கையெழுத்து இயக்கம்
அதில், நீட் தேர்வுக்கு எதிராக கையெழுத்திடும்படி பள்ளி மாணவர்கள் நிர்பந்திக்கப்படுவதாக கூறியுள்ளார். எந்த அனுமதியும் பெறாமல் நடத்தப்படும் இந்த கையெழுத்து இயக்கத்தை அமைச்சரே துவங்கியுள்ளதால், ஆசிரியர்களும், அதிகாரிகளும் எதிர்ப்பு தெரிவிக்கவில்லை. மேலும் இது பொன்ற நிகழ்வுகளால் நீட் தேர்வுக்கு தயாராக வேண்டாம் என்ற எண்ணம் மாணவர்கள் மனதில் ஏற்படும் என கூறியுள்ளார். எனவே பள்ளி வளாகத்தில் எந்த அரசியல் நடவடிக்கைகளையும் அனுமதிக்க கூடாது. பள்ளிகளில் கையெழுத்து இயக்கம் நடத்த அனுமதிக்க கூடாது என பள்ளிக்கல்வித் துறைக்கு உத்தரவிட வேண்டும் என மனுவில் கோரியிருந்தார். இந்த மனு இன்று தலைமை நீதிபதி கங்காபூர்வாலா மற்றும் நீதிபதி பரத சக்கரவர்த்தி ஆகியோர் அடங்கிய அமர்வில் இன்று விசாரணைக்கு வந்தது.
ஒரு லட்சம் ரூபாய் டெபாசிட்
வழக்கை விசாரித்த நீதிபதிகள், கையெழுத்து இயக்கத்தால் மனுதாரர் எப்படி பாதிக்கப்படுகிறார்? என கேள்வி எழுப்பினர். நீட் தேர்வு விஷயத்தில் மத்திய அரசு ஏதேனும் முடிவெடுத்து, அது மாணவர்கள் நலனுக்கு விரோதமாக அமைந்தால் வழக்கு தொடரலாம்.என நீதிபதிகள் குறிப்பிட்டனர். அரசியல் கட்சி எதிர்ப்பு தெரிவிக்க உரிமை உள்ளது. இந்த வழக்கின் உண்மைத்தன்மையை நிரூபிக்க ஒரு லட்சம் ரூபாயை டெபாசிட் செய்தால் வழக்கை விசாரிப்பதாக நீதிபதிகள் தெரிவித்தனர். அப்போது, வழக்கை வாபஸ் பெறுவதாக மனுதாரர் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இதை ஏற்றுக் கொண்டு வழக்கை வாபஸ் பெற அனுமதியளித்து, வழக்கை முடித்து வைத்து உத்தரவிட்டனர்.
இதையும் படியுங்கள்