அரசியல் ஸ்திரத்தன்மை இல்லாததால் நீட் தேர்வை தமிழக அரசு ஏற்றுக் கொண்டுள்ளதாக சென்னை உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

நீட் தேர்வில் இருந்து தமிழகத்திற்கு விலக்கு அளிக்க வேண்டும் என்று தமிழக அரசு தொடர்ந்து வலியுறுத்தி வந்தது. இது தொடர்பாக சட்டமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட சட்டம் குடியரசுத் தலைவரின் ஒப்புதலுக்காக அனுப்பப்பட்டுள்ளது. 

ஆனால் இச்சட்டத்திற்கு குடியரசுத் தலைவர் இதுவரை அனுமதி வழங்கவில்லை.ஆனால் தமிழகத்தில் நீட் தேர்வு கண்டிப்பாக நடத்தப்படும் என்று மத்திய அரசு திட்டவட்டமாக தெரிவித்தது.

இந்தச் சூழலில் நீட் தேர்வில் இருந்து தமிழகத்திற்கு விதி விலக்கு அளிக்கக்கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது. இவ்வழக்கு மீதான விசாரணை சென்னை உயர்நீதிமன்றத்தில் இன்று நடைபெற்றது.

 அப்போது பேசிய தனிநீதிபதி, 'நீட் தேர்வுக்கு முதலில் எதிர்ப்புத் தெரிவித்த தமிழக அரசு, தற்போது சம்மதிக்கிறதா. என்று கேள்வி எழுப்பினார். அரசில் ஸ்திரத்தன்மை இல்லாததால் நீட் தேர்வை அரசு ஏற்றுள்ளது என்றும், நீட் தேர்வு தொடர்பாக எம்சிஐ-யும் தமிழக அரசும் நாளை விரிவான பதில்மனு தாக்கல்செய்ய வேண்டும் என்றும்  நீதிபதி உத்தரவிட்டார்.