பாரத ஸ்டேட் வங்கியும், இந்தியன் ஆயில் நிறுவனமும் செய்து கொண்ட ஒப்பந்தத்தின் அடிப்படையில், எஸ்.பி.ஐ. கடன் அட்டைகளைக் கொண்டு ரூ.2 ஆயிரம் பணம் எடுத்துக் கொள்ள ஐந்து பெட்ரோல் பங்குகளில் "கேஷ் பாயிண்ட்' அமைக்கப்பட்டுள்ளன.
அதன்படி, தருமபுரி நேதாஜி புறவழிச்சாலையில் உள்ள திரு பாலாஜி பெட்ரோலியம், பாப்பிரெட்டிப்பட்டி வட்டம், தென்கரைக் கோட்டையிலுள்ள அம்மன் பெட்ரோலியம் மற்றும் பொம்மிடியிலுள்ள முனிரத்னம் பியூவல்ஸ் ஆகிய மூன்று பெட்ரோல் விற்பனை நிலையங்களில் உள்ள கையடக்கக் கருவியில் எஸ்.பி.ஐ. டெபிட் அட்டையைத் தேய்த்தால், பெட்ரோல் நிலையத்தினர் ரூ.2 ஆயிரம் வழங்குவர்.
500, 1000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என மத்திய அரசு அறிவித்ததைத் தொடர்ந்து வங்கிகளில் ஏற்பட்டுள்ள கூட்டத்தை கட்டுப்படுத்தும் வகையில் இந்த திட்டம் செயல்படுத்தப்படுகிறது.
இதேபோன்று கிருஷ்ணகிரி மாவட்டத்தில் 2 பெட்ரோல் விற்பனை நிலையங்களில் பாரத ஸ்டேட் வங்கியின் கடன் அட்டையைப் பயன்படுத்தி ரூ.2 ஆயிரம் பணம் பெற்றுக் கொள்ளலாம்.
ஆயிரம், 500 ரூபாய் நோட்டுகள் செல்லாது என அறிவிக்கப்பட்ட நிலையில், புதிய ரூபாய் நோட்டுகளைப் பெறுவதற்கு வங்கி, ஏடிஎம் மையங்களில் மக்கள் குவிந்து வருகின்றனர்.
இதையடுத்து பொதுமக்களின் அவதியை குறைக்கும் வகையில் இனி நீங்கள் வங்கிக்கோ, ஏ.டி.ஏமிற்கோ செல்ல வேண்டாம். அன்றாட தேவைக்கு பெட்ரோல் பங்கிலேயே பணத்தை பெற்றுக் கொள்ளலாம்.
