குடும்பம் நடத்த வராத கோபத்தில் மனைவியை எரித்துக் கொன்று தலைமறைவான கணவனை 11 மாதம் கழித்து போலீசார் சுற்றிவளைத்து பிடித்து கைது செய்தனர்.
சென்னை, திரிசூலம் பகுதியை சேர்ந்தவர் ஜான்சன். பெயிண்டர். இவரது மனைவி ஜெனிபர். தம்பதிக்கு, ஒரு ஆண் மற்றும் ஒரு பெண் குழந்தைகள் உள்ளன.

கணவன், மனைவிக்கு இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டதால், கடந்த 2014ம் ஆண்டு ஜெனிபர் தன்னுடைய 2 குழந்தைகளுடன் பெரும்பாக்கத்தில் உள்ள தாய் வீட்டுக்கு வந்துவிட்டார்.

இந்நிலையில், ஜெனிபர் கடந்த 2017ம் ஆண்டு ஏப்ரல் 9ம் தேதி, பெரும்பாக்கத்தில் உள்ள சர்ச்சுக்கு வந்துள்ளார். இதனை அறிந்த ஜான்சன் சர்ச்சுக்கு வந்து ஜெனிபரிடம் சமரசம் பேசுவதுபோல் நடித்து வெளியில் அழைத்துள்ளார். 

இவரது பேச்சை நம்பிய ஜெனிபர் கணவருடன் வெளியில் வந்தபோது ஆள்நடமாட்டம் இல்லாத இடத்தில் ஜெனிபர் மீது பெட்ரோல் ஊற்றி, கொளுத்திவிட்டு தப்பி சென்றார். ஜெனிபரின் அலறல் சத்தம்கேட்டு அந்த வழியாக வந்தவர்கள் மீட்டு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு சிகிச்சை பலனளிக்காமல் ஜெனிபர் பரிதாபமாக இறந்தார்.

இதுகுறித்து, வழக்கு பதிவு செய்து வழக்குப்பதிவு செய்து, தலைமறைவான ஜான்சன் தொடர்பாக விசாரணை நடத்தியபடி அவரை தேடி வந்தனர். இதற்கிடையே ஜெனிபரின் பெற்றோர் பெண் குழந்தையை சின்னநீலாங்கரையில் இயங்கும் குழந்தைகள் காப்பகத்தில் சேர்த்துள்ளனர்.

இந்நிலையில் நேற்று மதியம், ஜான்சன் சின்னநீலாங்கரை குழந்தைகள் காப்பகத்துக்கு வந்து தனது குழந்தையை பார்த்துள்ளார். பின்னர் மேடவாக்கம் பகுதியிலுள்ள நண்பர் வீட்டுக்கு சென்றுள்ளார். ஜான்சனின் வருகை பற்றிய தகவல் போலீசாருக்கு தெரிய வந்ததால் அவர்கள் விரைந்து சென்று, ஜான்சனை மடக்கிப் பிடித்து கைது செய்தனர்.