சென்னையில் கனமழை மற்றும் நான்குநாள் தொடர் விடுமுறை காரணமாக, தென் மாவட்ட மக்கள் சொந்த ஊருக்கு கிளம்பி செல்வது போன்ற காரணங்களால் முக்கிய சாலைகளில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.

இன்று  முதல் 15-ம் தேதி வரையில் தொடர் விடுமுறை என்பதால் சென்னையில் இருந்து மாநிலத்தின் பிற பகுதிகளுக்கு தமிழக அரசு சார்பில் கூடுதல் பேருந்துகள் இயக்கப்படுகின்றன.

இதனால் கோயம்பேடு பேருந்து நிலையத்தில் இருந்து  ஒரே நேரத்தில் நூற்றுக்கணக்கான பேருந்துகள் புறப்பட்டுள்ளதால் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.  வாகனங்கள் முன்னேறி செல்ல முடியாமல் திணறின. இதே போன்று சுங்கச்சாவடிகளிலும் வாகனங்கள் அணிவகுத்து நின்றன. 

அதே நேரத்தில்  சென்னையில் நேற்று மாலை  பல்வேறு இடங்ளில் பரவலாக மழை பெய்தது. சென்னையில், கிண்டி, கத்திப்பாரா, சைதாப்பேட்டை, தி.நகர், அண்ணாசாலை , அண்ணா மேம்பாலம் , ஸ்டெர்லிங்சாலை, அடையாறு சர்தார் படேல் சாலை, பாரிமுனை ,கோயம்பேடு, பூந்தமல்லி உட்பட பல்வேறு பகுதிகளில்  கன மழை பெய்ததால் நகர் முழுவதும்  கடும் போக்குவரத்து நெரிசல் காணப்பட்டது. 

மேலும் பெருங்களத்தூர் முதல் செங்கல்பட்டு வரையிலும்  போக்குவரத்து ஸ்தம்பித்தது.  சொந்த வாகனங்கள் மற்றும் அரசு மற்றும் தனியார் போக்குவரத்து மூலம் ஒரே நேரத்தில் செல்வதால் பெருங்களத்தூர் முதல் செங்கல்பட்டு வரையில்  கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.

2 மணி நேரத்திற்கும் மேலாக வாகனங்கள் நகர முடியாமல் தவித்ததால் பயணிகள் மற்றும் வாகன ஓட்டிகள் கடும் அவதிக்குள்ளாகினர்.