Asianet News TamilAsianet News Tamil

தூத்துக்குடியில் 62 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு கனமழை; அடித்த வெயிலுக்கு ஒரே நாளில் வடிந்தது தண்ணீர்...

Heavy rainfall in Thoothukudi up to 62 years Water dropped on a single day
Heavy rainfall in Thoothukudi up to 62 years Water dropped on a single day
Author
First Published Mar 16, 2018, 10:48 AM IST


தூத்துக்குடி 

தூத்துக்குடி மாநகர பகுதியில் 62 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு 200 மில்லி மீட்டர் பதிவான கனமழையால் தேங்கிய தண்ணீர் வெளுத்து வாங்கிய வெயிலுக்கு ஒரேநாளில் வடிந்தது.

கன்னியாகுமரி அருகே நிலைகொண்ட குறைந்த காற்றழுத்த தாழ்வுநிலை காரணமாக தூத்துக்குடி மாவட்டத்தில் நேற்று முன்தினம் அதிகாலையில் கனமழை பெய்தது. 

இதில் தூத்துக்குடி மாநகர பகுதியில் 62 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு 200 மில்லி மீட்டர் மழை கொட்டி தீர்த்தது. இதனால் தூத்துக்குடி மாநகரில் பெரும்பாலான இடங்களில் மழைநீர் சுமார் 2 அடி உயரத்துக்கு தேங்கியது. திரேஸ்புரம் பகுதியில் சுமார் 40 வீடுகளை மழைநீர் சூழ்ந்தது. 

இரயில் நிலையத்தில் மழைநீர் தேங்கி தண்டவாளத்தை மூழ்கடித்ததால், இரயில் சேவை பாதிக்கப்பட்டது. நேற்று முன்தினம் காலையில் மழை முற்றிலும் நின்றுவிட்டதால், மழைநீர் மெல்ல மெல்ல வடியத் தொடங்கியது.

தூத்துக்குடி மாநகரின் பெரும்பாலான பகுதிகளில் வரலாறு காணாத மழையால் தேங்கிய மழைநீர், வந்த சுவடே தெரியாமல் ஒரே நாளில் வற்றி மறைந்துவிட்டது. இரயில் நிலையத்திலும் தேங்கிய தண்ணீர் முற்றிலும் வடிந்து வெளியேறியது. இதனால் நேற்று முன்தினம் மாலை முதல் இரயில் போக்குவரத்து சீரானது. 

நேற்று காலை முதல் வெயில் அடிக்க தொடங்கியது. மழைக்கு பின் வந்த, இந்த வெயிலின் தாக்கம் அதிகமாக இருந்தது. தூத்துக்குடியில் நேற்று 86 டிகிரி வெயில் அடித்தது. இதனால் நேற்று மதியம் சாலை வெறிச்சோடி காணப்பட்டது. வாகன ஓட்டிகள் வெயிலின் தாக்கத்தால் மிகவும் அவதிப்பட்டனர். 

அதே நேரத்தில் மீனவர்களுக்கு நேற்று வரை கடலுக்கு செல்ல வேண்டாம் என்று எச்சரிக்கை விடுக்கப்பட்டு இருந்தது. இதனால் நேற்றும் நாட்டுப்படகு மற்றும் விசைப்படகு மீனவர்கள் கடலுக்கு செல்லாமல், படகுகளை கரையில் நிறுத்தி வைத்து இருந்தனர். 

தூத்துக்குடி வ.உ.சி. துறைமுகத்தில் ஏற்றப்பட்டு இருந்த 3–ஆம் எண் எச்சரிக்கை கூண்டு நேற்று இறக்கப்பட்டது.
 

Follow Us:
Download App:
  • android
  • ios