குமரி உள்ளிட்ட 6 மாவட்டங்களில் கனமழை பெய்யும் என வானிலை மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. கேரள மாநிலத்தில் தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்துள்ளது. இதன் காரணமாக குமரி, நீலகிரி, கோவை, தேனி, நெல்லை, திண்டுக்கல் மாவட்ட மலைப்பகுதியில் கனமழை முதல் மிக கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளது.

வெப்ப சலனம் காரணமாக தமிழகம் மற்றும் புதுச்சேரியில் சில இடங்களில் இடியுடன் மழை பெய்யக்கூடும். சென்னையை பொறுத்த வரை வானம் மேகமூட்டத்துடன் காணப்படும். ஒரு சில இடங்களில் இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும். கடந்த 24 மணி நேரத்தில் தக்கலையில் 15 செ.மீ., குழித்துறையில் 10 செ.மீ., காட்டுக்குப்பத்தில் 9 செ.மீ., நாகர்கோவில் 8 செ.மீ., இரணியலில் 7 செ.மீ., குளச்சல் மற்றும் மயிலாடியில் 5 செ.மீ., மதுராந்தகத்தில் 4 செ.மீ. மழையும் பதிவாகியுள்ளது.

தென்மேற்கு மற்றும் மேற்கு திசையில் இருந்து மணிக்கு 55 கிலோமீட்டர் வேகத்தில் பலத்த காற்று வீசக்கூடும் என வானிலை மையம் கூறியுள்ளது.

தென் தமிழக கடலோரப் பகுதியில் குளச்சல், தனுஷ்கோடி இடையே கடல் சீற்றத்துடன் காணப்படும். 3.3 மீட்டர் உயரத்துக்கு அலைகள் எழும்ப வாய்ப்புள்ளது. எனவே தென் கடலோர மீனவர்கள், அடுத்த 24 மணி நேரத்துக்கு கடலுக்குள் செல்ல வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.