மாலத்தீவு அருகே நிலை கொண்டுள்ள காற்றழுத்தத் தாழ்வுப்பகுதி, காற்றழுத்தத் தாழ்வு மண்டலமாக வலுப்பெற்றுள்ளதால் தென் தமிழகத்தில் அடுத்த 3 நாட்களுக்கும், சென்னை உட்பட தமிழகத்தில் வட மாவட்டங்களில் நாளையும், நாளை மறுநாளும் கன மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

தமிழகத்தில் இந்த ஆண்டும் வழக்கம் போல் வட கிழக்கு பருவமழை பொய்த்துப் போனது. சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர் உள்ளிட்ட ஒரு சில மாவட்டங்களைத் தவிர மாநிலம் முழுவதும் கடும் வறட்சி நிலவி வருகிறது.

அதுவும் தற்போது வெயில் காலம் தொடங்கிவிட்டதால் கோடை வெயில் சுட்டெரித்து வருகிறது. தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் தண்ணீர் பஞ்சம் தலைவிரித்தாடுகிறது.

இந்நிலையில் இந்திய பெருங்கடல் பகுதியில் குமரிக்கு தெற்கே, மாலத்தீவு அருகே நிலவிய காற்றழுத்த தாழ்வு பகுதி வலுப்பெற்று உள்ளது. இது தென்கிழக்கு அரபிக்கடல் பகுதியை நோக்கி நகரும் என்றும் பின்னர் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெறும் என்றும் சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குநர் பாலச்சந்திரன் தெரிவித்துள்ளார்.

இந்த தாழ்வு மண்டலத்தால்  சென்னை உட்பட வட தமிழகத்தில் 15 மற்றும் 16ம் தேதிகளில் மிதமான மழை பெய்யும் என்றும் அடுத்த 3 நாட்களுக்கு தென் தமிழகத்தின் பெரும்பாலான இடங்களில் கன மழை பெய்யும் என்றும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

.இதனிடையே இன்றும், நாளையும்,  குமரி கடலோரம், கேரளாவின் தென்பகுதி மற்றும் மாலத்தீவில் கடல் அலை கொந்தளிப்பாக காணப்படும் என்றும்  மணிக்கு 60 கிலோ மீட்டர் வேகத்தில் பலத்த காற்று வீசும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனால் மன்னார்வளைகுடா முதல் லட்சத்தீவுகள் வரை மீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டாம். கடலில் மீன்பிடித்துக்கொண்டு இருந்தால், அவர்கள் உடனடியாக அருகே உள்ள கரைப்பகுதிகளுக்கு சென்று விட வேண்டும் என்றும் வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.

இதனிடையே காற்றழுத்த தாழ்வு மண்டலம் மற்றும் கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் அறிவுறுத்தி இருப்பதன் காரணமாக கேரள மீனவர்கள் யாரும் கடலுக்கு செல்ல வேண்டாம் என்று  கேரள மாநில முதலமைச்சர்  பினராயி விஜயன் கேட்டுக்கொண்டுள்ளார்.

மேலும் முன்எச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்வது குறித்து அவர் அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார்.