இலங்கை மற்றும் குமரிக்கடலுக்கும் தெற்கில் உருவாகியுள்ள வணிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக தமிழகத்தில் ஆங்காகங்கே மழை பெய்ய வாய்ப்புள்ளது என வானிலை மையம் கூறியுள்ளது. மேலும் டெல்மா மாவட்டங்களில் அடுத்த 24 மணிநேரத்தில் லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது.  

இன்று சென்னை வானிலை மைய இயக்குநர் கூறுகையில் தமிழகத்தில் கடந்த அக்டோபர் மாதம் தொடங்கிய வடகிழக்கு பருவமழை இன்னும் முடிவுக்கு வராத நிலையில் தொடர்ச்சியாக மழை பெய்யும் வாய்ப்புள்ளதாக எதிர்பார்க்கப்படுகிறது. வடகிழக்கு பருவக்காற்று வலுவாக வீசுவதால் தமிழகம் மற்றும் புதுச்சேரியில் அடுத்த 24 மணி நேரத்திற்கு ஒரிரு இடங்களில் லேசான மழை பெய்யக்கூடும்.

தென் தமிழகம் மற்றும் டெல்டா மாவட்டங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது. சென்னையை பொறுத்தவரை வானம் மேகமூட்டத்துடன் காணப்படும். அதிகபட்சமாக கடந்த 24 மணி நேரத்தில் நெல்லை மாவட்டம் மணிமுத்தாறில் 7 செ.மீ மழை பதிவாகியுள்ளது. 

இந்நிலையில், தென்சீனக் கடல் பகுதியில் பிலிப்பைன்ஸ் அருகே காற்றழுத்த தாழ்வு மண்டலம் ஒன்று உருவாகியுள்ளது. இது வலுப்பெற்று 4ம் தேதி தாய்லாந்து பகுதியை கடந்து அந்தமான் பகுதிக்கு வர வாய்ப்புள்ளது. அப்படி வரும்பட்சத்தில் அந்த காற்றழுத்தம் வட மேற்கு திசையில் நகர்ந்து 7ம் தேதி அல்லது 8ம் தேதி தமிழக கடலோரப் பகுதிக்கு வரவும் வாய்ப்புள்ளது. அதன் காரணமாக தமிழகத்தில் தொடர்ந்து மழை பெய்யும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.