திண்டுக்கல் 

திண்டுக்கல் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் சாரல் மழை பெய்ததால் விவசாயிகளும், மக்களும் பெரும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

திண்டுக்கல் மாவட்டத்தில் கடந்த சில நாள்களாக வெயிலின் தாக்கம் அதிகரித்து வந்தது. இதனால், பல இடங்களில் குடிநீர் பிரச்சனை தலை தூக்கியது. 

இந்த நிலையில், வங்கக் கடலில் உருவாகியுள்ள காற்றழுத்தத் தாழ்வு மண்டலத்தால், திண்டுக்கல் மாவட்டத்தில் வெயிலின் தாக்கம் திங்கள்கிழமை அன்று குறைய ஆரம்பித்தது. அதனைத் தொடர்ந்து நேற்று காலை முதலே வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்டது. பிற்பகல் முதல் மாவட்டத்தின் பல்வேறு பகுதியிலும் மிதமாக மழை பெய்யத் தொடங்கியது.

நீண்ட நாள்களுக்கு பிறகு பெய்த இந்த மழையால், தொடர்ந்து அதிகரித்து வந்த வெப்பநிலை முற்றிலும் குறைந்து குளிர்ச்சி நிலவியது. 

அதேபோன்று, பழனியில் நேற்று காலை சுமார் அரை மணி நேரம் சாரல் மழை பெய்தது. இதனால், குளிர்ந்த சூழல் நிலவியது. மேலும் மாலை வரை வெயிலின் தாக்கம் குறைந்தே இருந்ததால் மாலையிலும் சிறிது நேரம் சாரல் மழை பெய்தது. 

இந்த சாரல் மழையால், விவசாயத்துக்கும், நிலத்தடி நீருக்கும் எந்த பயனில்லாவிட்டாலும், குளிர்ச்சியான தட்பவெப்பநிலை நிலவியது. 

மாவட்டத்தில், திண்டுக்கல் நகர், சிறுமலை, நத்தம், குஜிலியம்பாறை, வத்தலகுண்டு உள்ளிட்ட பல்வேறு பகுதிகளிலும் குறிப்பிட்ட இடைவெளியில் மழை பெய்ததால் மக்களும், விவசாயிகளும் பெரும் மகிழ்ச்சி அடைந்தனர்.