Heavy rain in tamilnadu many district
தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் கத்திரி வெயிலின் தாக்கம் அதிகரித்து வரும் நிலையில், சில மாவட்டங்களில் பரவலாக மழை பெய்துள்ளது பொது மக்களிடையே அதிக மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கடந்த 3 நாட்களுக்கு முன்பு கத்திரி வெயில் தொடங்கியது. வரும் 28 ஆம் தேதி வரை கத்திரி நீடிக்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் தமிழகம் முழுவதும் வெயில் கொளுத்தி வருகிறது. சில மாவட்டங்களில் வெயிலின் அளவு 100 டிகிரியை தாண்டியதால், குழந்தைகள், முதியவர்கள், அலுவலகம் செல்பவர்கள் என மக்கள் மிகுந்த சிரமத்திற்கு உள்ளாகினர்.
இந்த நிலையில் வெப்பச்சலனம் காரணமாக தமிழகத்தின் சில மாவட்டகளில் பலத்த மழை பெய்துள்ளது. தேனி மாவட்டத்தில் தேனி, அல்லிநகரம், பழனிசெட்டிபட்டி, பெரியகுளம் உள்ளிட்ட பகுதிகளில் பலத்த காற்று மற்றும் இடியுடன் கூடிய கனமழை பெய்தது.
மாலையில் தொடங்கிய மழை நள்ளிரவு வரை நீடித்தது. கனமழை காரணமாக சோத்துப்பாறை அணையில் அதன் முழுகொள்ளளவான 126 அடியை எட்டியது.

இதேபோன்று நெல்லை மேற்குத்தொடர்ச்சி மலைப் பகுதிகளில் தொடர்ந்து மழை பெய்து வருவதால் குற்றால அருவிகளுக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது. நேற்று மாலை செங்கோட்டை தாலுகா பகுதிகளான பண்பொழி, கரிசல்குடியிருப்பு, திருமலைகோவில், அச்சன் புதூர், வடகரை உள்ளிட்ட பகுதிகளில் பலத்த மழை பெய்தது.
மேலும் சேலம் மாவட்டத்திலும் ஏற்காடு அடிவாரம், கோரிமேடு, அஸ்தம்பட்டி உள்ளிட்ட பகுதியில் இடியுடன் கூடிய கனமழை பெய்தது. மழையின் காரணமாக வெயிலின் தாக்கம் தணிந்துள்ளதால் மக்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.
இதனிடையே வெப்பச் சலனம் காரணமாக தமிழகத்தின் உள் மாவட்டங்களில் இன்று கனமழை வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
