Asianet News TamilAsianet News Tamil

அடடா! என்னா ஒரு மழை! பெரம்பலூரில் ஒன்றரை மணிநேரம் வெளுத்து வாங்கிய கன மழை; 

Heavy rain in perambalur one and a half hours
Heavy rain in perambalur one and a half hours
Author
First Published May 10, 2018, 7:46 AM IST


பெரம்பலூர்

பெரம்பலூரில் ஒன்றரை மணி நேரம் விடாமல் பெய்த கன மழையால் சாலைகளில் வெள்ளம் பெருக்கெடுத்தது. இதனால், வெயிலின் தாக்கத்தில் இருந்து தப்பித்த மக்கள் மகிழ்ச்சியடைந்தனர்.

பெரம்பலூர் மாவட்டத்தில் கடந்த ஒரு மாதத்திற்கும் மேலாக வெயிலின் தாக்கம் மிகவும் கடுமையாக இருந்தது. வெயில் 100 டிகிரியையும் தாண்டி மக்களை வாட்டி வதைத்தது. இதனால் மக்கள் வெளியே செல்ல கூட தயங்கினர். 

இந்த நிலையில் கடந்த 4-ஆம் தேதி முதல் கத்திரி வெயில் தொடங்கியது. நேற்று மதியம் வெயிலின் தாக்கம் மிக கடுமையாக இருந்தது. இதனால் வெயிலின் தாக்கத்தில் இருந்து தப்பிக்க மக்கள் குடை பிடித்தபடியும், பெண்கள் துப்பட்டாவால் தலையை முடிக்கொண்டும் சாலையில் சென்றனர். 

மேலும், வெயிலினால் ஏற்படும் தாகத்தை மக்கள் இளநீர், மோர், கரும்பு சாறு, பழ சாறு போன்றவற்றை குடித்து தீர்த்துக் கொண்டனர். சாலையோரங்களில் விற்கப்படும் உடலுக்கு குளிர்ச்சி தரும் முலாம்பழம், தர்ப்பூசணி, நுங்கு ஆகியவற்றை ஆர்வத்துடன் மக்கள் வாங்கி சென்றனர்.

இதையடுத்து நேற்று மாலை 3 மணியளவில் வானில் கருமேகங்கள் திரண்டு பலத்த காற்று வீசியது. இதனைத் தொடர்ந்து திடீரென்று பெய்த மழை சுமார் 1½ மணி நேரம் வரை நீடித்து கன மழையாக கொட்டி தீர்த்தது. இதனால் சாலையில் மழைநீர் வெள்ளம்போல கரைபுரண்டு ஓடியது. 

இதனால் வாகன ஓட்டிகள் வாகனங்களின் முகப்பு விளக்குகளை எரியவிட்ட படியே சென்றனர். மழை பெய்தபோது பெரம்பலூர் பகுதியில் மின்சாரம் இல்லை. திடீரென்று பெய்த மழையால் வெயிலின் தாக்கத்தில் தப்பித்த மக்கள் மகிழ்ச்சியடைந்தனர். பெரம்பலூர் சுற்றுப்புற கிராம பகுதிகளிலும் நேற்று நல்ல மழை பெய்தது.  

Follow Us:
Download App:
  • android
  • ios