Heavy rain in kurangani forest
12 பேரை பலி கொண்ட குரங்கணி வனப்பகுதியில் நேற்று கன மழை கொட்டித் தீர்த்தது. இந்த மழை 2 நாட்களுக்கும் முன் பெய்திருந்தால் பல உயிர்கள் காப்பாற்றப்பட்டிருக்குமே என அப்பகுதி பொது மக்கள் வேதனை தெரிவித்தனர்.
தேனி மாவட்டம் போடி அருகே உள்ள குரங்கணி மலைப்பகுதியில் மலையேற்ற பயிற்சிக்கு சென்ற 39 பேரில் 12 பேர் தீயில் கருகி பலியாகினர். மேலும் சிலர் படுகாயங்களுடன் உயிருக்கு ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.


இந்நிலையில் நேற்று காலை முதல் தேனி மாவட்டத்தில் பரவலாக மழை பெய்து வருகிறது. தீ விபத்து நடந்த குரங்கணி வனப்பகுதியிலும் மழை பெய்து வந்த நிலையில் நேற்று மாலை முதல் கன மழையாக கொட்டித் தீர்த்தது.

இதனால் கடந்த 10 நாட்களுக்கும் மேலாக பற்றி எரிந்த காட்டுத் தீ முற்றிலும் அணைந்தது. இதனால் தீ விபத்து நடந்த எந்த தடயமும் தெரியாத அளவுக்கு வனப்பகுதி தற்போது ரம்யமாக காட்சியளிக்கிறது.
இந்நிலையில் தற்போது பெய்யும் இந்த மழை 2 நாட்களுக்கும் முன் பெய்திருந்தால் பல உயிர்கள் காப்பாற்றப்பட்டிருக்குமே என அப்பகுதி பொது மக்கள் வேதனை தெரிவித்தனர்.
