heavy rain in chennai rescue operations initiated by cm and district administration

வடகிழக்குப் பருவ மழை துவங்கி 4 நாட்களில் கன மழை பெய்ததில், தமிழகத் தலைநகரான சென்னையின் பெரும்பாலான பகுதிகளில் வெள்ள நீர் பெருக்கெடுத்தது. பெருகிய மழை நீர் லேசாக வடிந்து சென்றாலும் மீண்டும் மழை பெய்து தண்ணீர் பெருகிவிடுகிறது. இந்நிலையில், பொதுமக்கள் பெரிதும் அவதிப்பட்டு வருகின்றனர். மழைக்காலம் துவங்கும் முன்னதாக முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்படாமல், இப்போது களத்தில் இறங்கியுள்ளது அரசு என்கின்றனர் பொதுமக்கள். 

Add Asianetnews Tamil as a Preferred SourcegooglePreferred

இந்நிலையில், முதல்வர் பழனிசாமி தற்போது களத்தில் இறங்கி, நிவாரணப் பணிகளை முடுக்கி விட்டிருக்கிறார். வெள்ளத்தால் ஏற்பட்ட பாதிப்புகளை அறிந்து நிவாரணப் பணிகளில் ஈடுபட அமைச்சர்கள், ஐஏஎஸ் அதிகாரிகளை நியமித்து முதல்வர் எடப்பாடி பழனிசாமி உத்தரவிட்டிருக்கிறார். 

வடகிழக்குப் பருவ மழையால் ஏற்படும் பாதிப்புகளில் மீட்புப் பணிகளை ஒருங்கிணைக்க அனைத்து மாவட்டங்களிலும் அந்தந்த மாவட்ட அமைச்சர்களுடன் மூத்த ‌ஐஏஎஸ் அதிகாரிகளை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி நியமித்துள்ளார்.

இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், மழையால் பாதிக்கப்பட்ட மக்களை பாதுகாப்பான இடங்களுக்குக் கொண்டு சென்று உணவு, குடிநீர் மற்றும் மருத்துவ வசதிகளை வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. பாதிக்கப்பட்ட மக்கள் தங்குவதற்கு கடலோர மாவட்டங்களில் 115 பல்நோக்கு பாதுகாப்பு மையங்கள் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன. மீட்பு, நிவாரணப் பணிகளை மேற்கொள்ள அந்தந்த மாவட்ட அமைச்சர்களுடன் ஐஏஎஸ் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர் என்று எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.

பெருநகர சென்னை மாநகராட்சியின் 15 மண்டலங்களுக்கும் தலா ஒரு அமைச்சர் மற்றும் ஐஏஎஸ் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ள நிலையில், தெருவோர மின் பகிர்மான பெட்டிகளை உயரத்தில் அமைக்கவும் முதல்வர் உத்தரவிட்டுள்ளார். தண்ணீர் விரைவாக வெளியேறாத பகுதிகளை கண்டறிந்து கூடுதல் மோட்டார்களை பயன்படுத்தி நீரை விரைவாக வெளியேற்ற உத்தரவிட்டுள்ள முதல்வர், மழை பாதித்த பகுதிகளில் மருத்துவ முகாம்களை நடத்தி, தொற்றுநோய் ஏற்படாதபடி அந்தப் பகுதிகளை சுத்தப்படுத்தி ப்ளீச்சிங் பவுடர் தெளிக்கவும் அதிகாரிகளுக்கு உத்தரவு பிறப்பித்துள்ளார்.