சென்னையில் தேனாம்பேட்டை, சூளைமேடு, வில்லிவாக்கம் உள்ளிட்ட பகுதிகளில் இன்று மழை பெய்தது. ஒரு சில இடங்களில் தற்போதும் மழை பெய்து வருகிறது.

சென்னையில் இன்று இலேசான காற்றுடன் வானம் மேகமூட்டங்களாக இருந்த நிலையில், இன்று மாலை திடீரென மழை பெய்தது. சூளைமேடு, வளசரவாக்கம், குரோம்பேட்டை, தாம்பரம், ராயபுரம், வில்லிவாக்கம், எழும்பூர், புரசைவாக்கம், சென்ட்ரல், சிந்தாரிப்பேட்டை ஆகிய இடங்களில் மழை பெய்தது. 

இந்த திடீர் மழை, சென்னையில் கடந்த சில நாட்களாக நிலவி வந்த புழுக்கமான சூழலில் இருந்து மக்களை சற்று இளைப்பாற்றும் வகையில் அமைந்தது.

இதேபோல் மதுரை, சேலம், திருவள்ளூர் மாவட்டங்களின் பல பகுதிகளில் மிதமான மழை பெய்தது. தமிழகத்தின் மேலும் சில பகுதிகளில் மிதமான மழைக்கு வாய்ப்பு இருப்பதாகவும்  சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. 

இதனிடையே வட மாநிலங்களில் பல பகுதிகளில் கனமழைக்கு வாய்ப்பிருப்பதாகவும்,  கர்நாடகத்தின்  தென்பகுதியில் கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாகவும்  இந்திய வானிலை ஆராய்ச்சி மையம் தெரிவித்துள்ளது.

இது காவிரி நீர்ப்பிடிப்புப் பகுதி என்பதால், ஏற்கனவே நிரம்பி வழியும் கபினி மற்றும் கேஆர்எஸ் அணைகளுக்கு கூடுதலாக நீர்  வர வாய்ப்புள்ளது. இதனால் அந்த அணைகளில் இருந்து  நீர் திறக்கும் அளவும் அதிகரிக்கும்.

இந்நிலையில், தமிழகம் மற்றும் புதுச்சேரியில் இன்று முதல் 27  ஆம் தேதி வரை மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாகச் சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.