Asianet News TamilAsianet News Tamil

விருதுநகரில் இடி மின்னலுடன் கனமழை... மின்தடை ஏற்பட்டாலும் வெயிலில் இருந்து தப்பித்ததால் மக்கள் மகிழ்ச்சி...

Heavy rain and thunderous lightning in Virudhunagar people escaped from the heat
Heavy rain and thunderous lightning in Virudhunagar people escaped from the heat
Author
First Published May 12, 2018, 7:39 AM IST


விருதுநகர்

விருதுநகரில் பலத்த சூறை காற்று மற்றும் இடி மின்னலுடன் பலத்த மழை பெய்தது. மின்தடை ஏற்பட்டு மக்கள் அவதி அடைந்தாலும் வெயிலின் தாக்கத்தில் இருந்து தப்பித்ததால் மகிழ்ச்சி அடைந்தனர்.  

விருதுநகர் மாவட்டம், அருப்புக்கோட்டையில் நேற்று நண்பகல் வரை வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்ட நிலையில் மாலை சுமார் 3.30 மணி முதல் பலத்த சூறைக்காற்று மற்றும் இடி மின்னலுடன் தொடர்ந்து சுமார் மூன்று மணி நேரம் பலத்த மழை பெய்தது. 
 
இந்த மழையால் புதுக்கடை பஜார், வாழவந்தம்மன் கோவில் பகுதி, திருஅமுதலிங்கேசுவரர் கோயில் நான்கு முனைச் சந்திப்பு ஆகிய பகுதிகளில் மழைநீர் சூழ்ந்ததால் போக்குவரத்து சில மணி நேரம் பாதிக்கப்பட்டது. 

மழை பெய்யத் தொடங்கியதும் மின்தடை ஏற்பட்டது.  இதனால் மக்கள் கடும் அவதிக்கு ஆளாகினர். மழையால் கண்மாய்ப் பகுதிகளில் நீர் வரத்து ஏற்பட்டதால் விவசாயிகள் மகிழ்ச்சியடைந்தனர்.

அதேபோன்று, சிவகாசி  பத்ரகாளியம்மன்கோயில் சித்திரைப் பொங்கல் விழா மே முதல் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. 

இதையடுத்து தினசரி காலை மற்றும் இரவு அம்பிகை வெவ்வேறு வாகனங்களில் வீதி உலா வந்து பக்தர்களுக்கு காட்சியளித்தார். 8-வது நாள் விழாவாக பொங்கல் விழா நடைபெற்றது.

இதனையொட்டி அடியார்கள் கோயிலின் முன்பு பொங்கலிட்டனர். 9-வது நாள் விழாவாக கயர்குத்து நடைபெற்றது. இதில் அடியார்கள் அலகு குத்தி, முளைப்பாரி எடுத்து, ஆயிரம்கண்பானை ஏந்தி, அக்னிச்சட்டி எடுத்து நேர்த்திக்கடன் செலுத்தினர்.

வியாழக்கிழமை தேர்வடம் தொடும் நிகழ்ச்சி நடைபெற்றது.  பின்னர் நேற்று மாலை சுமார் 4.30 மணியளவில் தேரோட்டம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டிருந்தது. 
 
இந்த  நிலையில் மாலை சுமார் 4.40 மணியளவில் சிவகாசியில் மழை பெய்யத் தொடங்கியது. மழை சுமார் 45 நிமிடம் விடாமல் பெய்தது. இதனால் தேர் இழுக்கப் பயன்படும் இரும்பு சங்கிலி முழுவதும் தண்ணீரால் நனைந்து போனது.  
 
மேலும் தேர் திரும்பும்போது வைக்கப்படும் கட்டைகளும் மழையில் நனைந்து விட்டன. எனினும் பக்தர்கள் தேரை இழுக்கத்தொடங்கினர். தேரை திரும்பவைக்கும் கட்டை மழையில் நனைந்து போனதால், தேர் தடத்திற்கு வராமல் , அருகே உள்ள பெருமாள்கோயில் வாசலருகே சென்று நின்றுவிட்டது. 

இதையடுத்து தேரை சனிக்கிழமை இழுப்பது  என கோயில் நிர்வாகத்தின் சார்பில் முடிவு செய்து தேரோட்டம் நிறுத்தப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

Follow Us:
Download App:
  • android
  • ios