கடந்த ஆண்டு நவம்பர், டிசம்பர் மாதங்களில் பெய்த கன மழை காரணமாக சென்னை, திருவள்ளூர், கடலூர் உள்ளிட்ட மாவட்டங்கள் வெள்ளத்தால் பெருமளவில் சேதமடைந்தது.

எந்தவித முன்னறிவிப்புமின்றி செம்பரம்பாக்கம் ஏரி திறந்து விட்டதால் சென்னை முழுவதும் வெள்ளக்காடாக காட்சி அளித்தது. வீடுகளில் தண்ணீர் புகுந்து பொதுமக்கள் தங்களது உடைமைகளை இழந்து உண்ண உணவின்றி சொல்ல முடியா துன்பம் அனுபவித்தனர்.

இந்நிலையில், சென்னையில் கடந்த ஆண்டைப் போலவே இந்த ஆண்டும் தமிழ்நாட்டில் பலத்த மழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக எச்சரிக்கப்பட்டுள்ளது.

இதைத் தொடர்ந்து வெள்ளப் பாதிப்பு ஏற்படலாம் என்று கருதப்படும் பகுதிகளில் தமிழக அரசு பல்வேறு முன்னெச்சரிக்கை ஏற்பாடுகளை மேற்கொண்டு வருகின்றனர்.

அதன்படி, சென்னை, கடலூர், தூத்துக்குடி நகரங்களில் வருகிற வெள்ளிக்கிழமை முதல் மீட்பு குழுவினர் தயார் நிலையில் நிறுத்தப்படுவார்கள். இவர்கள் வெள்ளம் சூழ்ந்த பகுதிகளில் இருந்து மக்களை மீட்க சிறு படகுகளுடன் தயார் நிலையில் இருப்பார்கள்.

மேலும், வெள்ளத்தில் இருந்து ஒவ்வொரு படகு மூலம் சுமார் 10 பேர் வரை மீட்க முடியும். இந்த வார இறுதிக்கு பிறகு மழை நிலவரத்தை பார்த்து விட்டு கூடுதல் படைகளை அழைக்க அரசு திட்டமிட்டுள்ளது.